Saturday 10 December 2011

உள்ளூர் தெய்வங்கள் - 2

இந்த பதிவு என் சொந்த ஊரைப் பற்றியது. எங்கள் பகுதியில் தந்தை பிறந்த ஊரையே சொந்த ஊராக சொல்லிக்கொள்வோம்(பூர்வீகம்).

எங்கள் ஊரில் இந்து என்ற வார்த்தையோ கடவுள் என்ற வார்த்தையோ பாடப்புத்தகத்தின் வாயிலாகவே நுழைந்திருக்கும். அதுவரை எங்கள் ஊரை காப்பது, எங்களுடன் எப்போதும் துணையாக நிற்பது எங்கள் முன்னோர்கள் நிறுத்திச் சென்ற இந்த நடுகல் நம்பிக்கைகள்(ல்) தான்.

ஊரின் மத்தியில் ஒரு மந்தையம்மன். அடுத்து ஒரு சங்கிலி கருப்பு. அவ்வளவுதான்.

ஊரில் நிலைத்து வாழ மந்தையம்மனின் தயவு வேண்டும். மந்தையம்மன் என்றும் வேறு வேலைகளுக்கு வருவதில்லை. அது ஊரைக்காக்கவும், ஊருக்குள் இருப்பவர்களை மேற்பார்வையிடவுமே அதற்கு நேரம் சரியாக இருக்கும். அதற்கு நன்றிக்கடனாக வருடத்தில் ஒரு நாள் பங்குனி மாசத்தில் ஊரே வரி போட்டு கோலாகலமாக பொங்கல் வைத்து முளைப்பாரி, கரகம், மஞ்சத்தண்ணி சகிதம் கொண்டாடி மகிழும்.

சங்கிலிக் கருப்புக்கு அந்த வேலை கிடையாது. கருப்பன் ரொம்ப துடியானவன். அவனை அப்படியே விட்டா ஊரையெ அழிச்சுபுடுவான்னு நாலுபக்கமும் சங்கிலியால கட்டி ஆறடி ஆழத்துக்கு புதைச்சு தலை மட்டும் மேலே தெரியிற மாதிரி நிக்க வச்சு கும்பிடப் படுற நீண்ட நெடு நடுகல் நாயகன் தான் சங்கிலி கருப்பன்.

கருப்பன் குடும்ப உள்ளூர் நடப்புகளை கவனிப்பவன் அல்ல. அவன் வெளியூர் செல்பவர்களுக்கு துணைக்கு செல்வதும், வெளியூர்காரர்களை ஊருக்குள் வர விடாமல் தடுக்க துணை நிற்கும் காவல் காரன் தான்.

கருப்பனுக்கு பெண்கள் ராத்திரியில் சுத்துவது ஆகாது. ஊர் சொத்தை திங்க நினைப்பவர்களும் ஆகாது. இவையெல்லாம் கருப்பன் நேரடியா வந்து செய்கிறானா இல்லை கருப்பன துணைக்கி வச்சுகிட்டு அவனோட வாரிசுகள் இதச்செஞ்சாய்ங்களான்னு தெரியாது. ஆனா இத்தனை வருசமா இந்த ஊர கட்டிகாப்பாத்தி, எவனையும் அனாவசியமான காரியத்தனம் பண்ணவிடாம காப்பாத்தி வந்திருக்கிறான்.

இன்று என் தலைமுறையில் தான் இவர்களுக்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது. பல காலமாக கட்டுண்டு கிடந்த இவர்களுக்கு ரிட்டைர்டுமெண்டு கொடுத்து விட்டு பெருந்தெய்வ சிலைகளை கொண்டுவந்து சுற்றிலும் சுவரமைத்து முன்னால் மிடுக்காக ஒரு கிரில் கேட் வைத்து சொகுசாக உள்ளே உக்கார வைத்து கும்பிட துவங்கி விட்டோம். ஆமாம், எல்லாம் ஆகம விதிப்படிதான்!

8 comments:

  1. நல்ல பதிவு.
    நல்ல எழுத்து நடை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. நன்றி ரத்தினவேல் ஐயா!

    ReplyDelete
  3. அட .. தொட்டு பாத்திருக்கீக.. நல்லது தான்.. நம்ம கோவில்களில் நாம வைச்சிகிரதுதானே ஆகம விதி..!நம்பிக்கைகளை சிதைக்க விரும்பவில்லை... அதே சமயம் ஏகத்தாளமாக ஹிந்து எனச்சொல்பவர்களை சாட்டைஅடி அடிக்கவும் வேணும்..!
    தொடரட்டும் தங்கள் வலைப்பூ பாணி..

    ReplyDelete
  4. எல்லாம் போச்சு! இனிமேல் இதை ஓலைச்சுவடி ஆராய்ச்சி நிலையங்களில் மட்டுமே காண முடியும்!

    ReplyDelete
  5. நன்பா எங்கள் குலதெய்வமும் அதுதான் எங்களுக்கு தெரியவில்லை.இது எந்த ஊர் என்று சொல்லவும்.9444779236.

    ReplyDelete
  6. நன்பா எங்கள் குலதெய்வமும் அதுதான் எங்களுக்கு தெரியவில்லை.இது எந்த ஊர் என்று சொல்லவும்.9444779236.

    ReplyDelete