Wednesday 7 December 2011

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
http://www.pattukkottaiyar.com/site/
http://astro.temple.edu/~dnavanee/PattuKalyan/biography.html

பிறப்பு வளர்ப்பு குடும்பம்
தமிழ் நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதி சுந்தரம் என்கிற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உள்ளனர். பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுடைய குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) இவர் அகால மரணம் அடைந்தார்.
எழுத்தாற்றல்
பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக இசைத்தார். இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது. 1955ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.
கம்யூனிஸ ஆர்வம்
இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார்.நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார். தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டு இறுதியில் கவிஞராக உருவானவர்.
கல்யாணசுந்தரம் அவர்களின் பன்பரிமாணங்கள்
விவசாயி
மாடுமேய்ப்பவர்
மாட்டு வியாபாரி
மாம்பழ வியாபாரி
இட்லி வியாபாரி
முறுக்கு வியாபாரி
தேங்காய் வியாபாரி
கீற்று வியாபாரி
மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி
உப்பளத் தொழிலாளி
மிஷின் டிரைவர்
தண்ணீர் வண்டிக்காரர்
அரசியல்வாதி
பாடகர்
நடிகர்
நடனக்காரர்
கவிஞர்
பட்டுக்கோட்டையாரின் முத்திரைக் கேள்வி (1959)
சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?

1 comment:

  1. தாய்மனம்8 December 2011 at 07:59

    In English people call it bench mark
    In Tamil film industry Pattukottaiyaar songs are the bench mark

    அதே போல நம் கால கவிஞர்களின் படைப்பை எடை போடும் பொழுது பட்டுகோட்டையாரின் கவிதைகளின் தரத்தை 100% என்று வைத்து பிறகவிதைகளை எடை போடுவது வழக்கமாகிவிட்டது. அந்த அளவு உயர்வான கவிதைகள் படைத்தார். அன்னாரின் படைப்புகள் எல்லாமே 29 வயதுக்குள் முடித்தது.

    ஆசைக்கு அணை போட்ட அறிவான நங்கை
    அன்புக்கு பொருள் சொன்ன அருள் மங்கை

    தன் அக்காவுக்கு கலையான பரிசாக தந்த தங்கையை பற்றிய பாடல்

    ReplyDelete