Saturday 10 December 2011

உள்ளூர் தெய்வங்கள் - 1

இப்போது இதை எழுத காரணம், வரும் திங்கட்கிழமையன்று, எங்கள் அம்மா வழி தாத்தா ஊரில் அம்மன் சிலை வைத்து குடமுழுக்கு விழா நடத்துகிறார்கள். இத்துடன் இத்தனை வருடங்களாக காத்துவந்த எங்கள் சொந்த தெய்வமான மந்தையம்மனை வெறியேற்றிவிட்டு காளியம்மனை கொண்டுவந்து வைக்கிறோமே என்ற ஒரு குற்ற உணர்ச்சியின் காலப்பதிவே இந்த கல்வெட்டு(ப்ளாக் பேஜ்)

மந்தை அம்மன் என்ற ஒன்று இந்த பகுதி மக்களின் ஒரு வகை வழிபாட்டுத்தெய்வம். அதாவது மக்கள் கூட்டம் கூட்டமாக ஒவ்வொரு இடங்களில் தங்கள் குடியிருப்பை அமைத்துக்கொள்ளும் போது, அந்த கூட்டத்திற்கு அல்லது அந்த மந்தைக்கு இடமளித்து காப்பாற்றவேண்டி, அங்கே வாழ்ந்துகொண்டிருக்கும் அந்த லோக்கல் சூப்பர் நேச்சுரல்/ஆதிமுதல் ஓனருக்கு பயந்து பயபக்தி கலந்த மரியாதையின் வெளிப்பாடு தான் இந்த மந்தை அம்மன். இது பிற்காலங்களில் தெய்வம் என்ற சொல்லால் பிறரிடம் கம்யூனிகேட் செய்ய சொல்லித்தரப்பட்டது.

இதுநாள் வரை இத்தகைய தெய்வங்களுக்கு தனி உருவமென்பது கிடையாது. அந்த பகுதியிலேயே கிடைத்த ஏதாவது ஒரு நீட்ட கல்லோ அல்லது முக்கோண வடிவிலான உருவம் போன்ற கல்லோதான் வணக்கத்திற்குரியதாக வைக்கப்பட்டிருந்தது. வருடத்திற்கு ஒரு முறை பங்குனி மாசத்தில் இவ்வகை தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து கொண்டாடுவதே அந்த மந்தையில் நடக்கும் மிகப்பெரிய திருவிழாவாக இருந்தது. இந்த தெய்வங்களுக்கென்று உண்டியல் கிடையாது, தனி(டெடிகேட்டட்) பூசாரி கிடையாது. மக்களோடு மக்களாக அவைகளும் எல்லாச் சண்டைகளிலும் பங்குபெற்று வசவு வாங்கியோ, சாட்சியாகவோ அல்லது பிற்காலத்தில் தண்டணை வழங்கும் ஊர் பெரியவராகவோ வாழ்ந்து கொண்டிருந்தது.

காலங்கள் உருண்டோடின. சைவ, வைணவ, சமண, புத்த, முகலாய, கிருத்துவ....இன்ன பிற மதங்களின் நேரடித்தாக்குதலில் அழியாத இந்த உள்ளூர்காரி இன்று தன் சொந்த மக்களால் முதுகில் குத்தப்பட்டு தூக்கி வெளியே வீசப்படும் நிலை வருமென்று யாரும் அவளுக்கு சொல்லவில்லை.

இன்றைய தலைமுறைக்கு கைக்குள் அடங்காத அளவு பணமும், மூளைக்கு மேல் உள்ள முடியும் சிந்திக்கும் அளவு அறிவும் வந்ததன் பலன், மந்தையம்மன், காளியம்மனின் மறு உருவமென்றும், இத்தனை நாள் வசதியில்லாததால், உருவமற்று கஷ்டப்பட்டாள் என்றும், அவளுக்கு புனர்ஜென்மமளித்து, இன்று அவளுக்கு உருவமளித்து, நல்ல கோயில் அமைத்து, அதற்கு சாஸ்திர சம்பிரதாயப்படி(?) பெருந்தெய்வ புரமோசன் கொடுத்திருக்கிறார்கள்.

இதை தட்டிக்கேட்க அவளுக்கு தைரியமில்லை, அவளுக்கு துணை நின்று இதை தடுத்து நிறுத்த எனக்கு நெஞ்சுரமுமில்லை.

நான் இன்று இதை எழுதுவதற்காக இத்தனை ஆயிரம் வருஷங்களாக என் வம்ச மூதாதையரை எல்லாம் காற்றிலும் மழையிலும் நோய் நொடிகளிலும் போர் பிரளயங்களிலுமிருந்து காத்ததன் பலனை இந்த ஒரு ப்ளாக் பேஜ் எழுதி விட்டு கையை தட்டிவிட்டு துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு என் கடன் தீர்ந்த திருப்தியுடன் என் பொழப்பை பார்க்கச் செல்கிறேன்!

No comments:

Post a Comment