Monday 26 December 2011

அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்!



ஊர்கூடித் தேர் இழுப்போம் என்பதே ஊரை ஒன்றாக்கத்தான். தேரை இழுப்பதற்காக சொல்லப்படுவதல்ல. ஆனால் ஊர்கூடிச் செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்கள் மிகச் சொற்பமானவையே!

ஊர் ஓட சேர்ந்து ஓட வேண்டும்! என்ற பழமொழி மட்டுமே இன்று அதிகம் பின்பற்றப்படுகிறது. திரும்பி நில்! துணிந்து செல்! எதிர்த்துப் போரிடு! என்பவையெல்லாம் எவர் காதுக்கும் எட்டுவதில்லை! இதை கண்கூடாக காண விரும்புவோர் இணையதளங்களில் நிகழும் முல்லைப் பெரியார் அணை பற்றிய விவாதங்களைப் பார்த்தாலே புரிந்து கொள்வீர்கள்.

போராட்டம் என்பது ஜனநாயக உரிமையேயன்றி, சட்ட விரோதச் செயல் அல்ல என்பதே மெத்தப்படித்த பலருக்குப் புரிவதில்லை. போராளிக்கும், தீவிரவாதிக்கும் வித்தியாசங்களை இவர்களுக்கு சொல்லித்தராத நம் தமிழ்த்தாத்தாக்களையே முதலில் சாட வேண்டும். போராட்டம் என்றால் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு காட்டு வழியே ஒழிந்து திரிந்து வாழ்பவர்களுக்கான ஒரு இனச்சொல் என்று இவர்களின் மூளைதான் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கவேண்டும்.

ஒரு நாட்டின் வரலாற்றில் புரட்சி என்பது எத்தனை முக்கியமானதொரு சடங்கு என்பதை இந்தக்கால இண்டர்நெட் தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பில்லை தான். இவர்களுக்குத் தான் இரவைப் பகலாக்க பல வளைத்தளங்கள் நவரச விருந்து படைத்துக்கொண்டிருக்கின்றனவே!

முல்லைப்பெரியார் அணைப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட மாவட்ட மக்கள் மட்டுமல்லாது, ஈரோடு, கோவை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், சென்னை என அனைத்து மாவட்ட மக்களும் தங்களின் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்திய விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. போராட்டக்காரர்களின் பங்கு ஒருபுறமிருக்க வணிகர்களும், பொதுமக்களும் இதில் ஒத்துழைத்த விதம் நம் மக்களிடம் இன்னும் அந்த பேராண்மை தீர்ந்துவிடவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாய் “எங்களோட இந்த வருஷ வெள்ளாமை வெளையலன்னு நெனச்சிக்கிறோம்! எங்க பிள்ளைகுட்டிகளெல்லாம் பிற்காலத்துல நல்லா இருக்கணும்ங்கிறதுக்காக” என்று சொன்ன விவசாயியின் உணர்வில் தெரிவது அவனுடைய பெருந்தன்மை மட்டுமல்ல அவனின் பொதுநலப் பொறுப்பும் ஆகும்.

இவ்வாறு ஒரு மறுமலர்ச்சியின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் வெவ்வேறு ரூபங்களில் பங்களித்த உங்கள் அனைவருக்கும் என் நன்றியை சமர்ப்பிப்பதோடு இந்த மாற்றத்தை கைவிட்டுவிடாமல் தொடர்ந்து உங்கள் பெருங்குணத்தை உலகிற்கு பறைசாற்றிட வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.
"Great works are performed, not by strength, but by perseverance." Samuel Johnson 

இப்படிக்கு




2 comments:

  1. அருமையான பதிவு.

    ReplyDelete
  2. தாய்மனம்29 December 2011 at 09:39

    தலைவரே
    கடைசியில் நிங்க சொன்னது போலவே ஆகிவிடும் போல இருக்கே.
    மக்கள் முல்லைபெரியாறு அணையும் கூடங்குளம் அணுமின் உலையால் வரக்கூடிய பேராபத்தை தடுக்க, நடத்தும் போராட்டத்தையும்; பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை போராட மாட்டாங்க போல இருக்கே.
    ஈழத்தமிழர் நலன், தமிழக மீனவர்வாழ்க்கை பிரச்சனை என்று எல்லாத்தையும், கச்சதீவை விட்டு கொடுத்தது போல கை நழுவ விட்டுவிட்டு போய்விடுவார்களா

    ReplyDelete