Saturday 10 March 2012

ஐ.நா.வில் அமெரிக்க தீர்மானம்!

அமெரிக்க தீர்மானம், இலங்கை திரைக்கதை எழுதி தயாரித்த கற்றுக் கொண்ட பாடங்கள் சிபாரிசுகளுக்கு அப்பால் போகவில்லை - மனோ கணேசன்


ஐ.நா வின் தரூஸ்மன் அறிக்கையை அடிப்படையாக வைத்து அல்ல. இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதைவிடுத்து இத் தீர்மானத்தை இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச சதி என பொய்ப்பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் சமர்பிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பில் தமது கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் முகமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி தெரிவித்துள்ளார்.

அவர் அந்த அறிக்கையில்,
அமெரிக்காவின் தீர்மானம், மேற்குலக நாடுகளின் இலங்கைக்கு எதிரான சர்வதேசசதி முயற்சி என சிங்கள மக்கள் மத்தியில் அரசாங்கம் பிரச்சாரம் செய்தது. இலங்கை தலைவர்களை உலக போர்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தி மின்சார நாற்காலியில் உட்கார வைக்கும் முயற்சி என்று சொல்லப்பட்டது. இவை அனைத்தும் அப்பட்டமான வடிகட்டின பொய்கள் என இன்று நிரூபணமாகியுள்ளன.

அதேபோல், அமெரிக்க தீர்மானம் இலங்கை அரச தலைவர்களுக்கு எதிராக போர் குற்றச்சாட்டுகளை கொண்டுவர போகிறது என்று சில தரப்பினரால் தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. போரின் இறுதி கட்டத்தில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களுக்குக்கு நியாயம் பெற்று தரும் தீர்மானம் வரபோகின்றது எனவும் சொல்லப்பட்டது. ஐநா மனித உரிமை ஆணைக்குழு விவகாரத்தை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பில் ஆரம்பத்தில் இருந்தே கூட்டு செயற்பாடு எதிலும் ஈடுபடாமல் வெளியிடப்பட்ட இத்தகைய கனவு கருத்துகளும் இன்று பிழைத்துவிட்டன.

உண்மையில் அமெரிக்க தீர்மானத்தில் எந்த ஒரு இடத்திலும் மருந்துக்குகூட, ஐநாவின் தாருஷ்மன் அறிக்கையை பற்றி குறிப்பிடப்படவில்லை என்பதுதான் உண்மை. இது இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள வெற்றி. அதேவேளையில் இது ஏதோ மாபெரும் சர்வதேச சதி என்று சிங்கள மக்களிடம் காட்டி உள்நாட்டு தேசிய பொருளாதார மற்றும் விலைவாசி பிரச்சினைகளை திரை போட்டு மூடும் சந்தர்ப்பத்தையும் மேலதிகமாக இந்த தீர்மான செய்தி அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது.

தமது கற்றுக்கொண்ட ஆணைக்குழு சிபாரிசுகளை அமுல்படுத்துவதற்காக, இலங்கை அரசாங்கம் ஐநா மனித உரிமை ஆணைக்குழுவுடன் கூட்டு இணைந்து செயற்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருப்பது ஒன்றுதான் கொஞ்சமாவது தமிழ் மக்களுக்கு ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது. இதை அடிப்படையாககொண்டுதான் தமிழ் தரப்பு அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டும்.

இதில் இன்று இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு பெரும் நகைச்சவையாக அமைந்துள்ளது. உண்மையில் இந்த தீர்மானம் இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானமே அல்ல. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பில் அடிக்கடி இலங்கையிலும், இந்தியாவிலும் பேசிவருவதாக சொல்லப்படும் இந்திய அரசாங்கம், இந்த மிகச்சாதாரண தீர்மானம் தொடர்பில்கூட இன்னமும் உறுதியான நிலைப்பாடு எடுக்கவில்லை.

நமது கட்சியை பொறுத்த வரையில் நாம் ஒருபோதும், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல் அதை நாம் முற்று முழுதாக நிராகரிக்கவும் இல்லை. எனவே இந்த ஆணைக்குழுவினால் செய்யப்பட்ட சிபாரிசுகள் குறிப்பிட்ட காலவரையறைக்குள் அமுலாக்கப்படுவதை நாம் கண்காணிப்போம். அதற்கான அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்திற்கு, தோழமை கட்சிகளுடன் இணைந்து நாம் வழங்குவோம். என்றார்.