Tuesday 24 April 2012

காவியப் பெண்கள்!


 அட! அதுக்குள்ள கற்பனை குருதய தட்டிவிட்டு கண்ணகிக்கும் காத்தவராயனோட அம்மாவுக்கும் பறந்துடுறீங்க!

எங்க காலத்துல, ஏதுயா, புஸ்தகம், படிப்பு, பஜனை, கதாகாலட்சேபமெல்லாம்? எனக்குத் தெரிஞ்சதெல்லாம், சினிமா, அப்புறம் டிவி, டிவியில என்னன்னு கேக்குறீங்களா? அதுவும் சினிமாதேன். இப்படி எங்கும் சினிமா, எதிலும் சினிமான்னு நீக்கமற நிறைந்த ஒன்று தான் எங்கள் வாழ்வை நெறிப்படுத்த இறைவன் தந்த தற்கால நீதி நூல்!

சரி! ஆட்டைய ஆரம்பிப்போம். மொத சினிமாவுல வந்த பெண்களையும், பெண்களென்றால் என்ன என்று அது கற்றுக்கொடுத்த பாடத்தையும் பாப்போம்.

கடலோரக்கவிதைகள்ன்ற படத்துல, பாரதிராஜாங்கிற டைரக்கட்டர் என்னென்னமோ சொல்லிருக்காராம். எனக்கு ஒன்னும் வெளங்கல! ஆனா, என்னையும் அசர வச்ச ஒரே ஒரு ஆளு அதுல வாற ரெண்டாவது ஹீரோயினிதேன். ஒரு கட்டுமரத்துகிட்ட ஹீரோ சண்டை போட்டுக்கிட்ருக்கையில, ஓடியாந்து, ”மாமா! அவய்ங்க தப்பா பேசுனது ஜெனிபர் டீச்சர இல்ல, என்னியத்தான்னு” சொல்லி முடிக்கும் போது, பெண் என்ற வார்த்தையின் உயரம் என்னான்னு புரிஞ்சுக்க முடியுது. அதுக்குமேல அந்த படத்துல நடிச்ச யாரா இருந்தாலும் என் கண்ணுக்கு தெரியல. அதுல அவய்ங்க சொன்ன எந்த மேட்டரும் எனக்கு நெனவுல இல்ல.


அப்புறம், இப்ப ஒரு படம் வந்துச்சே! அதான், “தென்மேற்குப் பருவக்காற்று”ன்னு ஒரு படம். அதுலயும், செகண்டு ஹீரோயினி, “மாமா, எனக்கு எங்கப்பன் சேத்துவச்சதெல்லாம் கொண்டுவந்து தர்றேன். பத்தலன்னா, கடன் வாங்கிக்க! நான் நல்லா கூலிவேலை செய்வேன். கடனைக் கட்டிக்கலாம்”னு சொல்லி வாய்மூடல, என்கண்ணுல பொலபொலன்னு தண்ணி! நீ வேலைக்குப்போனா நானும் வேலைக்குப் போவேன், எனக்கும் எக்கனாமிகல் ப்ரீடம் வேணும்லங்கிற கேட்டகிரி இல்ல அது! ஒரு நாள் கல்யாணச் செலவுக்காக ஒரு ஆயுசு முழுக்க வேகாத வெயில்ல வெந்து வெண்ணச்சட்டியா சாகுறது அது! அந்த சீன, உத்துப்பாத்தாத் தெரியும், அவள் எம்புட்டுப் பெரிய பேரழகி, பெருந்தன்மையாழினி, எதற்கும் ஈடில்லாத ஒரு உயிர்(அரை மணி நேரமா இந்த எடத்துல என்ன வார்த்தை போடுறதுன்ன் தடுமாறி, கடுப்பாகி, இதப் போட்டு வச்சிருக்கேன். கண்டிப்பா, இது சரியான வார்த்தை இல்ல!) என்று புரியும்.

அதாகப்பட்டது; எனக்குத் தெரிந்த பெண் என்பதற்கான வரையறை அல்லது எடுத்துக்காட்டுகள் இப்படித்தான் அமைந்தன. பாக்யராஜ் படத்துல வர்ற ஓப்பன் டைப் ஹீரோயின்களோ, அல்லது ரஜினி டயலாக்ல வர்ற அடக்க, ஒடுக்க...... டைப்போ கிடையாது.

தொடரும்......

Tuesday 17 April 2012

வாழ நினைத்தால்.....


முன்னிருக்கையில் நீ, பின்னிருக்கையில் நான்!
உன்னருகில் கோவலன், என்னருகில் கும்பகர்ணன்!
அலைபாயும் கூந்தலில் அருவிக்கொத்தாய் முல்லைச் சரம்!
அறக்கப்பறக்க ஓடி வந்ததில் கலங்கிய குளமாய் என்முகம்!
அசைந்தது உன் சிரம், குலுங்கியதென்னவோ வாகனம்!
அழுத்தியழுத்தி அவனும் கேட்டுப்பார்த்தான், படியவில்லை நீ!
குனிந்து நிமிர்ந்து பார்க்கிறேன், கும்பகர்ணன் கொடுத்த இடைவெளியில் இவையெல்லாம்,

கூந்தலே பர்தாவாம், குறுக்கே ஆட்டும் தலையே விளக்கமாம்!
அடுத்த நிறுத்தத்திலேயே இறங்கிவிட்டான் அக்கயவன், அவசரமாய் வந்தமர்ந்தேன் உன்மடியில் பின், சரிந்து உன்னருகில்!
சினுங்கிச் சிதறினாய்! கோர்த்தனைத்தேன் மன்னிப்புக்கோரிக்கைகளால்!
போவதெங்கே அவசரமாய்!? ஆவலுடன் கேட்டது நீ! நிலைகுழைந்து சொருகிய கண்களைக் குவித்துச் சொன்னேன், பக்கத்தில் தான்!
எனக்கொரு டிக்கெட் அந்தப்பக்கம் சொன்னது நீ! சொல்லியவாய் மூடவில்லை, பாராசூட்டில்லாமல் குதித்தது நான்!

பின்னங்கால்கள் பிடறியில் பட பிடித்தேன் ஓட்டம் கீழிறங்கி!
முக்கால் மணி நேரம், மூன்று மைல் தூரம், மூன்று வீதிகள் அதிகமாகவே ஓடியிருக்கிறேன் முழித்துப்பார்த்தபோது!

அடுக்களைக்குள் அவள்! அலட்சியப்படுத்தாமல், அடுத்த அறைக்குள் நுழைந்த என்னை அழைத்தாள் நக்கலாக!

இன்னிக்கு பர்ஸ மறந்துட்டுப் போனீங்களே? பஸ் பாஸ், பைக்குள் இருந்ததா? உயிர் போனாலும் கடன் வாங்கேன் என்பீரே! ஆறு மணிக்குள் திரும்பாவிட்டால் மாலைக்கண் மானம் தூற்றுமென்பதறியீரோ?
சிட்டுக்குருவி லேகியமென்று இத்தனை நாளாய் குழந்தையின் சப்பட் லோசனை தின்றிருக்கீரே! என்ன செய்ய உம்மை?
........
தலைக்குள் ராட்டினமும், கண்களுக்குள் கருமேகமும், ஒருசேர வந்து திரள, சத்தமின்றிச் சாய்ந்தது சோபாவில், ஒண்டிப்புலி!

Friday 13 April 2012

இழப்பதற்க்கென்று இறுதியாய் ஒன்று...





பேய் மழையென்று யாரோ சொன்னது அப்போதுதான் நினைவுக்கு வந்தது கூந்தையனுக்கு! இருட்டுக்குள் மெல்ல நகர்ந்து சரிந்து வந்தவனுக்கு ஓரமாக ஒண்டிக்கொண்டிருந்த பூங்கொடியின் கை தட்டுப்பட்டது. ஐயோ! ராசா ஒனக்கு இன்னுமா ஒரக்கம் வரலை, கூரை ஓம்பக்கம் ஒழுகலைன்னு நெனைச்சேன், ஒழுகுன தண்ணி ஒன்னிய உசுப்பு விட்ருச்சாயா? வாயா வா! வந்து ஆத்தா மடிமேல படுத்துக்கஎன்று விம்மிய நெஞ்சுடன் வாரியணைத்து மடிமீது வைத்து உடல் குறுக்கி, இதமாய் உறங்கவைத்தாள்.

காக்காயன் ஓடிவந்தான். கூந்தையா! ஒங்கப்பன கல்லு போட்டு அமுக்கி கொண்டுபுடுச்சாம்டா! கொவாரில வேட்டு வச்சப்ப!என்று மூச்சிரைக்க சொல்லி முடித்தான். அவன் நம்மை ஏதோ சொல்லி திட்டுவது போல் தோன்றியதோ என்னவோ, அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது. இழ்ந்தது எதுவென்றே தெரியாமல் முதன் முதலாக அவன் அழுதுகொண்டே தெரு நெடுகிலும் பிஞ்சுக்கால்களை புழுதியில் பதித்தபடி அம்மாவைத் தேடி ஓடிக்கொண்டிருந்தான்.

ரெண்டாங்கிளாஸ்ல யாருடா கூந்தையன்றதுஅலறினார் செம்பட்டை வாத்தியார். எல்லோர் முன்னிலையிலும் தன்னை மட்டும் அவர் பேர்சொல்லி கூப்பிட்டதில் கை கால்கள் வெடவெடக்க எழுந்து நின்றவனுக்கு, என்ன நடந் த தென்றே தெரியவில்லை. கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டிருந் த து. காதெல்லாம் ஏதோ ஒரு நிசப்த ரீங்காரம் அரங்கேறிக்கொண்டிருந்தது. காக்காயன் எழுந்து இருவரின் மஞ்சப் பைகளையும் தேடி எடுத்து சிலேட்டைத் திணித்துக் கொண்டு இவனையும் பிடித்து இழுத்தவாறு நடந்தான். வீடு நெருங்க நெருங்க விருட்டென்று விலக்கிக்கொண்டு அம்மா என்றவாறு தாயிடம் அடைக்கலம் தேடிச்சென்றவனை, சுற்றி உட்கார்ந்து அழுதுகொண்டிருந்த பெண்கள் தடுத்து நிறுத்தி, ஒங்காத்தா ஒன்னிய நட்டாத்துல விட்டுட்டு போயிட்டாடான்னு சொன்னது மட்டும் அழுத்தம் திருத்தமாய் ஒலித்தது ஓலங்களுக்கிடையே!

நாலு வருசத்துல ரெண்டு எழவாடா ஒங்க வீட்டுல? எதுக்கும் நீ நாளைக்கிருந்து எங்கூட கல்லொடைக்கிற எடத்துக்கு வா! ஓன் தம்பிக்கும் ஒனக்கும் அங்கயே கூலு கரைச்சு கொண்டுக்கு வந்துர்றேன். இங்கணயே ஒக்காந்து கஞ்சிக்கி வீடுவீடாப் போயி கையேந்திக்கிட்ருக்காதீங்கடா!அதிகாரமாய் ஒலித்தது சூடாமணி கிழவியின் ஆதங்கம். அப்பன் ஆத்தா உறுதுணை இல்லைன்னாலும் கிழவிகளுக்குப் பஞ்சமில்லைடா இந்த ஊருல! தங்கத்தாயி ஆத்தா வெளித்திண்ணையிலிருந்து!

எங்க போனான்டா ஓந்தம்பி சப்பானி! கெரட்டையன் மகள் வீரம்மாள கழுத்தறுத்துப் போட்டுட்டு போயிருக்கான்டா. ஊருக்குள்ள ஒங்கள வெறிபுடுச்சுத் தேடிக்கிட்ருக்காய்ங்கடா எளந்தாரிகளெல்லாம்! வேகமா ஓடியாடா!வென்று வெரசுபடுத்திக்கொண்டு முன்னே ஓடிக்கொண்டிருந்தான் காக்காயன். வெட்டுப்பட்டுக் கை கால்களெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடந்தவைகளெல்லாம் ஒவ்வொன்றாய் இணைத்து தம்பியாய் அடையாளப்படுத்தும் முயற்ச்சிகள் நடந்துகொண்டிருந்தன.

கல்யாணத்தன்னிக்கு ஒன்னிய கூப்புட வேணாமுன்னு எங்காத்தாகாரி தான்டா எழவக்கூட்டிட்டா! அந்த வெளங்காத பய வம்சத்துல சாவுகாசம்(சகவாசம்) வைக்காதடான்டா! கேக்குறானா? ஒனக்கு எவனும் இத்தனை வருசமா பொண்ணுகுடுக்காததுக்குக்கூட நீயும் அவனும் சேர்ந்து சுத்துறது தான்டா காரணம்! ஏலே! சொன்னதக்கேக்கலன்னா இங்கனயே நாண்டுக்கு செத்துப் போவன்டா! கூந்தையனின் சமூக அடையாளத்தைப் பற்றித் தெளிவுபடுத்திக் கொண்டிருந்தான் காக்காயன். இருந்த வீட்டையும் காக்காயனுக்கு தாரைவார்த்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக்கொண்டிருந்தான் கூந்தையன்.

எலும்பும் தோலுமாய் இருந்த கிழவரிடம், டாக்டரய்யா, பேரென்னப்பா? என்றவுடன் இருமலைத் தொடர்ந்ததொரு ஈனஸ்வரம் கரைந்தது கூந்தையனென்று. டிபி சீக்கு முத்துறவரைக்கும் என்ன பெரிசு பண்ணிக்கிட்ருந்த? சரி சரி! போ! போயி நர்ஸம்மாகிட்ட இந்த ஊசியும் மாத்திரையும் எடுத்துத்தரச்சொல்லி வாங்கிக்கிட்டுப் போ! எந்த மாத்திரையா இருந்தாலும் வகுத்துக்கு கஞ்சியோ கூலோ குடிச்சிட்டு முழுங்கு! புவர் பெல்லோ!

என்ன மாயம் நடந்ததோ தெரியவில்லை, முத்து முத்தாக பத்து தூக்கமாத்திரைகள் கையில் நிறைந்து வழிந்து கொண்டிருந்தன. சிறுகச்சிறுக தன்னை தனித்துப் பிரித்து, இறுதியில் இருப்பதற்கொரு பெரிய சத்திரத்தையும் 4நாள் பசிக்காக பத்து மாத்திரைகளையும் சிருஷ்டித்த கடவுளைப் பார்த்து கடைசியாக ஏதோ சொல்ல நினைத்தவன், சுதாரித்துக்கொண்டு, கையைவிட்டுப் போவதற்குளாகவே அவசர அவசரமாய் முழுங்கிவிட்டான் மாத்திரை வரங்களை!

சத்திரத்தைக் கூட்டுமொரு பரதேவதை வந்து உற்றுப் பார்த்துவிட்டு, நிலைகுத்தி நின்ற கண்ணும், நெடுஞ்சாண் கிடப்பும், நெற்றியின் வெளிர்ப்பும், மந்தாகசப் புன்முறுவலும், மார்புக்கூடும் உற்றுப் பார்த்து ஒப்புவைத்தாள், ஊருக்கே கேட்குமாறு நெஞ்சில் அடித்துக்கொண்டு..., 

....யாத்தே! எந்தக் காட்டுப் பெயமகனோ? எந்தச் சிறுக்கி பெத்துப் போட்டாலோ? இப்பிடி அனாமத்தா அனாதப் பொணமா கெடக்கானே சிய்யான்!
தேர்கட்டித்தூக்க ஒனக்கெத்தன பிள்ளையோ!? தீப்பந்தம் புடிக்க எத்தன பேரனோ!?
எத்தனை ஊரக் கட்டி ஆண்டயோ? எத்தனபேரு ஒனக்கு சேவகம் செஞ்சாய்ங்களோ? எந்தூரு ராசாவோ?
........

இழப்பதற்கென வேறொன்றுமில்லையென்பேனென நினைத்தாயோ பரமனே!
இறுதியாய்! இதோ உனக்காய், ஆர்ப்பரிக்கும் கடலுடன்! அழகிய வனங்களுடன்! ஆயிரம் வேதனை சுமக்கும் மாந்தர்களுடன்! நான் வாழ நீ படைத்த உலகு உனக்கே!
ம்! நிமிர்ந்து பார்! வாங்கிக்கொள்!

Saturday 7 April 2012

10 கமாண்ட்மெண்ட்ஸ்!




1) நாங்கள் இருவரும் குடும்ப வாழ்க்கை என்ற வகுப்பில் இன்று முதல் பதிவு செய்து கொண்டு எங்களது ஆராய்ச்சியை துவங்குகிறோம். 

2) எந்த சூழ்நிலையிலும் நாங்கள் எங்கள் ஆராய்ச்சியையோ ஆராய்ச்சி விலங்கையோ கைவிட மாட்டோமென்று உறுதியளிக்கிறோம்.

3) எங்களுக்குள் கருத்துவேற்றுமைகளையும் அவற்றின் அளவுகளையும் மிகச்சரியாக குறித்துக்கொண்டு அதற்கான தகுந்த மருந்துகளை செலுத்திக்கொள்வோம் என உறுதி கூறுகிறோம்.

4) எங்கள் இருவரின் செல்போன்களின் உரையாடல்களை இன்றுமுதல் பதிந்து கொள்ள அரசிற்கோ மற்ற நிறுவனங்களுக்கோ உரிமை அளிக்கிறோம்(செல்போன் மூலம் செல்லுமிட விவரங்கள் உட்பட).

5) எங்களுக்குளான விவகாரங்கள் எப்போதாவது நான்கு சுவர்களைத் தாண்டி வெளியே வருமாயின், எங்கள் இருவரின் பெற்றோரையும் கீழ் குறிப்பிட்டுள்ள இரண்டு உறவினர்களையும், இரண்டு நண்பர்களையும் இருவர் தரப்பிலிருந்தும் விசாரணைக்கு உட்படுத்தவோ, தண்டிக்கவோ மற்றும் என்னவேண்டுமானாலும் செய்து கொள்ளவோ அவர்களின் ஒப்புதலோடு நான் இங்கு முன்னிருத்துகிறேன்.


6) நாங்கள் இருவரும் இனி வேறெந்த தலைப்பிலும் வாழ்க்கை ஆராய்ச்சியை மாற்றிக்கொள்ளவோ, சிந்திக்கவோ, ஒப்புக்கொள்ளவோ நேர்ந்தால் எங்களது பேரன் பேத்திகளுக்கு கல்யாணம் முடிந்தபின்பே அதை ஒப்புக்கொள்வோமெனவும் மீறினால் எங்களை செவ்வாய் கிரக புதுக்குடியமர்த்தலில் உபயோகித்துக்கொள்ளலாமென்றும் உறுதி கூறுகிறோம்.

7) பணத்தையோ, வசதியையோ, ஆடம்பர வாழ்க்கையையோ நாங்கள் விரும்பினால் அதற்கான முன்னோடியை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு அவைகளை பெற்றுக்கொள்வோமெனவும் உறுதியளிக்கிறோம்.

8) குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு பின்னர் யோசித்து கொண்டிராமல், வங்கிகளில் சம்ர்ப்பிப்பது போல், முன்னரே ஒரு ப்ராஜக்ட் ரிப்போர்ட் தயாரித்துக்கொடுத்துவிட்டு அதற்கான ஈட்டுப்பத்திரங்களையும் காட்டி ஒப்புதல் பெற்றே குழந்தை பெற்றுக்கொள்வோம்.

9) அன்னியப் பெண்களையோ ஆண்களையோ எங்கள் குடும்ப உள்நாட்டு விவகாரங்களில் தலையிட விடாமல் எங்கள் இறையாண்மையைக் காக்க பாடுபடுவோம்.

10) நாங்கள் இருவரும் மனமொத்து பிரியும் தருணத்தில் இருவரும் சேர்ந்து தாஜ்மகாலின் அளவு, அழகு மற்றும் மதிப்புள்ள ஒரு கட்டிடத்தை நாங்களே இணைந்து எங்கள் கைகளால் கட்டிக்கொடுத்த பின்பே பிரிந்து செல்வோம். 


பி.கு: இவற்றில் செய்யவேண்டிய மாற்றங்களையோ, சேர்க்கப்பட வேண்டியவைகளையோ அனைவரும் சிரத்தையெடுத்துச் செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன்!