Thursday 29 December 2011

பிரபல பெண் டிவிட்டரின் பார்வையில்...

 

பிரபல பெண் ட்விட்டர் அனு அவர்களின் பார்வையில் இன்றைய உலகம். அவரின் மனம் திறந்த வெளிப்படையான பதில்களை இங்கே காணலாம்.

1)   உலகம் உங்களை எவ்வாறாக அறியப்படவேண்டுமென விரும்புகிறீர்கள்?
               நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையாய்....பாரதியின் புதுமைப்பெண்போல் இருக்கத்தான் ஆசை . 
2)  உங்களுக்கு பிடித்த உலகம் எவ்வாறாக இருக்க வேண்டுமென விரும்புகிறீர்கள்?
    பொய், புரட்டு, ஊழல் இல்லாத நேர்மையான சமுதாயமாக.
 
3)      உங்களுடைய கடந்தகால நினைவுகளில் முக்கியமானவை?
     என் இனிய தோழிகளுடன் பழகிய கல்லூரி வாழ்க்கை . 
 
4)      நீங்கள் வெகுகாலமாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் காரியம்?
        ம்ம்ம்...அப்படி எதையும் அதிகமாக எதிர்பார்ப்பதில்லையே. 
 
5)      வாழ்க்கை பற்றிய உங்களது தத்துவம்?
         வாழ்க்கை இனியதுதான். அது இனிமையாவதும், சுமையாவதும் நம் கையில்   தான் இருக்கிறது என்பது உண்மைதான்.
 
6)      ட்விட்டருக்கு நீங்கள் வந்ததன் நோக்கம்? அது கிடைத்ததா?
         ம்ம்ம் ட்விட்டர் மிக பிரபலமானதால் இதில் இணையும் எண்ணம் வந்தது. 
 
7)     பெண் ட்விட்டர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை? 
            அறிவுரை கூறுமளவிற்கு  எனக்கே அனுபவம் இல்லை இங்கே .

8)     ஒரு பெண் ட்விட்டராக நீங்கள் சந்தித்த சிறந்த, மோசமான ட்விட்டர் தருணங்கள்?
           சிறந்த தருணங்கள்...இங்கு சில நல்ல தோழமைகள் கிடைத்தைச் சொல்லலாம். மோசமான தருணங்கள்  இங்கும் சில மனிதம் இல்லாத மனிதர்களைக் காணும்போது .    
             
9)     ஆண் ட்விட்டர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
         ஆண்களுக்குச் சொல்லும் அளவிற்கு நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை .

10)   பொதுவாக ட்விட்டர் பற்றிய உங்களது ஆராய்ச்சி முடிவு?
         விஷயங்களைப் பகிர்வதில் மிக அருமையான தளம் .



11)   உங்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு?
         புத்தகங்கள், இசை, ஓவியம், கவிதை...இந்த வரிசையில் இப்போது கணிணியும்.


12)   ஒரு நாளிற்கான உங்களது செயல்களை விளக்கவும்?
        ----


13)   வெளியே சுற்றுவது/வீட்டில் இருப்பது இவற்றில் நீங்கள் அதிகம் விரும்புவது?
       சுற்றுலா செல்வது, பார்க்காத இடங்களை, அதன் சிறப்பியல்புகளோடு பார்ப்பது பிடித்தமான விஷயம் .

14)   தூக்கம் பற்றிய உங்கள் கருத்து?
         தூக்கம்.......மனிதனுக்கு சரியான அளவில் தினமும் தேவைப்படும் ஓய்வு .   சாவுக்கான ஒத்திகை என்றும் சொல்லலாம் .

15)   காதல் பற்றிய உங்களுடைய செய்தி?
         ஆழ்மனதில் தோன்றும் பரிசுத்தமான நேசம். இதைக்கொச்சைப்படுத்துபவர்கள் நரகத்திற்குச் செல்லக்கடவது !

16)   ஆண் பெண் நட்புகளின் வரைமுறையாக நீங்கள் குறிப்பிடுவது?
         வரைமுறை அவரவரின் மனதிற்குத்தான் தெரியவேண்டிய விஷயம் .
17)   பெண்களின் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பவைகள்?
          சில நேரம் பெண்களேதான். அவர்களது நுட்பமான மனத்தடைகள்.

18)   இன்றைய காளையர்க்கும் வனிதையர்க்கும் உங்களின் வழிகாட்டுதல்?
        வழிகாட்டும் அளவிற்கு நான் ஒன்றும் வளரவில்லையே :(

19)   பெண்விடுதலை, கருத்து சுதந்திரம், சமுதாயத்தின் மரியாதை பற்றி?
        பெண்விடுதலை இன்னும் ஆண்களின் கையில் இருப்பதாகச் சொல்வதை ஏற்றுக்கொள்வதில்லை.
         மற்றவரை பாதிக்காத கருத்துகளுக்கு எப்போதும் சுதந்திரம் தான் இங்கே :)
         சமுதாயத்தின் மரியாதை ஒருவரிடம் இருக்கும் செல்வத்தை மட்டுமே அளவிடுகிறது.. அவர்களின் மனதை பார்த்து அளவிடும்போதுதான் அது நிஜமான மரியாதையாக இருக்கும் .

20)   பெண்களை கவர 4 டிப்ஸ்?
     உண்மையாக இருப்பதும், உரிய மரியாதை கொடுப்பதும், ஒரு விஷயத்தை பிரச்னையை சமாளிக்கும் பக்குவமும், நாகரிகமாக இருப்பதும்,  எப்போதும் பெண்களைக் கவரும்.

21)   ஆண்களிடம் எதிர்பார்க்கும் 4 நல்ல குணங்கள்? வெறுக்கும் 4 கெட்ட குணங்கள்?
        மேலே சொன்னவையே எதிர்பார்க்கும் குணங்கள்.
         வெறுப்பவை இதற்கு எதிர்ப்பதங்கள் தான் :)))

       (ஒரே கேள்வி ரிபீட் அடிக்கறீங்களே சாரே :( (கலாய்ச்சிட்டாங்களாமாம்! )


22)   செல்போன், கம்ப்யூட்டர், வெளியூர் வேலை போன்றவற்றால் குடும்பம், சொந்தம், நட்பு போன்றவை அடைந்த நிலை?
         நட்பும், சொந்தமும் இந்த தொடர்புசாதனங்களால் வளரத்தான் செய்கிறது. 
குடும்பத்திற்குச் செலவிட தான் நேரம் கிடைப்பதில்லை நமக்கு :(

23)   ஜெயலலிதா, சோனியா காந்தி... தலைமைப் பண்புகளாக நீங்கள் காணும் குணங்கள்?
       ஜெயலலிதாவின் தைரியம், துணிச்சல், அறிவுக்கூர்மை - நிச்சயமாக இவையாவும் தலைமைப்பண்புகள்தான்.
மற்றவரிடம் அத்தகைய பண்புகள் எதையும் காணவில்லை - மன்னிக்கவும் !

24)   ஒரு ஞான குருவாக நீங்கள் உலகத்துக்கு சொல்லவிரும்பும் மற்ற செய்திகள்?

 மன்னிக்கவும் :)



நீதி: போய் பிள்ளைகுட்டிய படிக்க வையுங்கடா!

Monday 26 December 2011

அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்!



ஊர்கூடித் தேர் இழுப்போம் என்பதே ஊரை ஒன்றாக்கத்தான். தேரை இழுப்பதற்காக சொல்லப்படுவதல்ல. ஆனால் ஊர்கூடிச் செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்கள் மிகச் சொற்பமானவையே!

ஊர் ஓட சேர்ந்து ஓட வேண்டும்! என்ற பழமொழி மட்டுமே இன்று அதிகம் பின்பற்றப்படுகிறது. திரும்பி நில்! துணிந்து செல்! எதிர்த்துப் போரிடு! என்பவையெல்லாம் எவர் காதுக்கும் எட்டுவதில்லை! இதை கண்கூடாக காண விரும்புவோர் இணையதளங்களில் நிகழும் முல்லைப் பெரியார் அணை பற்றிய விவாதங்களைப் பார்த்தாலே புரிந்து கொள்வீர்கள்.

போராட்டம் என்பது ஜனநாயக உரிமையேயன்றி, சட்ட விரோதச் செயல் அல்ல என்பதே மெத்தப்படித்த பலருக்குப் புரிவதில்லை. போராளிக்கும், தீவிரவாதிக்கும் வித்தியாசங்களை இவர்களுக்கு சொல்லித்தராத நம் தமிழ்த்தாத்தாக்களையே முதலில் சாட வேண்டும். போராட்டம் என்றால் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு காட்டு வழியே ஒழிந்து திரிந்து வாழ்பவர்களுக்கான ஒரு இனச்சொல் என்று இவர்களின் மூளைதான் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கவேண்டும்.

ஒரு நாட்டின் வரலாற்றில் புரட்சி என்பது எத்தனை முக்கியமானதொரு சடங்கு என்பதை இந்தக்கால இண்டர்நெட் தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பில்லை தான். இவர்களுக்குத் தான் இரவைப் பகலாக்க பல வளைத்தளங்கள் நவரச விருந்து படைத்துக்கொண்டிருக்கின்றனவே!

முல்லைப்பெரியார் அணைப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட மாவட்ட மக்கள் மட்டுமல்லாது, ஈரோடு, கோவை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், சென்னை என அனைத்து மாவட்ட மக்களும் தங்களின் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்திய விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. போராட்டக்காரர்களின் பங்கு ஒருபுறமிருக்க வணிகர்களும், பொதுமக்களும் இதில் ஒத்துழைத்த விதம் நம் மக்களிடம் இன்னும் அந்த பேராண்மை தீர்ந்துவிடவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாய் “எங்களோட இந்த வருஷ வெள்ளாமை வெளையலன்னு நெனச்சிக்கிறோம்! எங்க பிள்ளைகுட்டிகளெல்லாம் பிற்காலத்துல நல்லா இருக்கணும்ங்கிறதுக்காக” என்று சொன்ன விவசாயியின் உணர்வில் தெரிவது அவனுடைய பெருந்தன்மை மட்டுமல்ல அவனின் பொதுநலப் பொறுப்பும் ஆகும்.

இவ்வாறு ஒரு மறுமலர்ச்சியின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் வெவ்வேறு ரூபங்களில் பங்களித்த உங்கள் அனைவருக்கும் என் நன்றியை சமர்ப்பிப்பதோடு இந்த மாற்றத்தை கைவிட்டுவிடாமல் தொடர்ந்து உங்கள் பெருங்குணத்தை உலகிற்கு பறைசாற்றிட வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.
"Great works are performed, not by strength, but by perseverance." Samuel Johnson 

இப்படிக்கு




இறுதியாய் ஒரு வரம்!

 ஒழுகாத வானம்
தகிக்காத பூமி
சுழிக்காத காற்று
சுடரொளிச் சூரியன்
விரட்டாத மழை
வீதியெல்லாம் நிழல்
...இவையாவும் வேண்டேன்!

நொடிப் பொழுதேனும்
பயக்குறி நீக்கி
விழித்திரை மூட
வீடொன்றன்றி வேறென்
கேட்பேன் பராபரமே!

Saturday 10 December 2011

உள்ளூர் தெய்வங்கள் - 2

இந்த பதிவு என் சொந்த ஊரைப் பற்றியது. எங்கள் பகுதியில் தந்தை பிறந்த ஊரையே சொந்த ஊராக சொல்லிக்கொள்வோம்(பூர்வீகம்).

எங்கள் ஊரில் இந்து என்ற வார்த்தையோ கடவுள் என்ற வார்த்தையோ பாடப்புத்தகத்தின் வாயிலாகவே நுழைந்திருக்கும். அதுவரை எங்கள் ஊரை காப்பது, எங்களுடன் எப்போதும் துணையாக நிற்பது எங்கள் முன்னோர்கள் நிறுத்திச் சென்ற இந்த நடுகல் நம்பிக்கைகள்(ல்) தான்.

ஊரின் மத்தியில் ஒரு மந்தையம்மன். அடுத்து ஒரு சங்கிலி கருப்பு. அவ்வளவுதான்.

ஊரில் நிலைத்து வாழ மந்தையம்மனின் தயவு வேண்டும். மந்தையம்மன் என்றும் வேறு வேலைகளுக்கு வருவதில்லை. அது ஊரைக்காக்கவும், ஊருக்குள் இருப்பவர்களை மேற்பார்வையிடவுமே அதற்கு நேரம் சரியாக இருக்கும். அதற்கு நன்றிக்கடனாக வருடத்தில் ஒரு நாள் பங்குனி மாசத்தில் ஊரே வரி போட்டு கோலாகலமாக பொங்கல் வைத்து முளைப்பாரி, கரகம், மஞ்சத்தண்ணி சகிதம் கொண்டாடி மகிழும்.

சங்கிலிக் கருப்புக்கு அந்த வேலை கிடையாது. கருப்பன் ரொம்ப துடியானவன். அவனை அப்படியே விட்டா ஊரையெ அழிச்சுபுடுவான்னு நாலுபக்கமும் சங்கிலியால கட்டி ஆறடி ஆழத்துக்கு புதைச்சு தலை மட்டும் மேலே தெரியிற மாதிரி நிக்க வச்சு கும்பிடப் படுற நீண்ட நெடு நடுகல் நாயகன் தான் சங்கிலி கருப்பன்.

கருப்பன் குடும்ப உள்ளூர் நடப்புகளை கவனிப்பவன் அல்ல. அவன் வெளியூர் செல்பவர்களுக்கு துணைக்கு செல்வதும், வெளியூர்காரர்களை ஊருக்குள் வர விடாமல் தடுக்க துணை நிற்கும் காவல் காரன் தான்.

கருப்பனுக்கு பெண்கள் ராத்திரியில் சுத்துவது ஆகாது. ஊர் சொத்தை திங்க நினைப்பவர்களும் ஆகாது. இவையெல்லாம் கருப்பன் நேரடியா வந்து செய்கிறானா இல்லை கருப்பன துணைக்கி வச்சுகிட்டு அவனோட வாரிசுகள் இதச்செஞ்சாய்ங்களான்னு தெரியாது. ஆனா இத்தனை வருசமா இந்த ஊர கட்டிகாப்பாத்தி, எவனையும் அனாவசியமான காரியத்தனம் பண்ணவிடாம காப்பாத்தி வந்திருக்கிறான்.

இன்று என் தலைமுறையில் தான் இவர்களுக்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது. பல காலமாக கட்டுண்டு கிடந்த இவர்களுக்கு ரிட்டைர்டுமெண்டு கொடுத்து விட்டு பெருந்தெய்வ சிலைகளை கொண்டுவந்து சுற்றிலும் சுவரமைத்து முன்னால் மிடுக்காக ஒரு கிரில் கேட் வைத்து சொகுசாக உள்ளே உக்கார வைத்து கும்பிட துவங்கி விட்டோம். ஆமாம், எல்லாம் ஆகம விதிப்படிதான்!

உள்ளூர் தெய்வங்கள் - 1

இப்போது இதை எழுத காரணம், வரும் திங்கட்கிழமையன்று, எங்கள் அம்மா வழி தாத்தா ஊரில் அம்மன் சிலை வைத்து குடமுழுக்கு விழா நடத்துகிறார்கள். இத்துடன் இத்தனை வருடங்களாக காத்துவந்த எங்கள் சொந்த தெய்வமான மந்தையம்மனை வெறியேற்றிவிட்டு காளியம்மனை கொண்டுவந்து வைக்கிறோமே என்ற ஒரு குற்ற உணர்ச்சியின் காலப்பதிவே இந்த கல்வெட்டு(ப்ளாக் பேஜ்)

மந்தை அம்மன் என்ற ஒன்று இந்த பகுதி மக்களின் ஒரு வகை வழிபாட்டுத்தெய்வம். அதாவது மக்கள் கூட்டம் கூட்டமாக ஒவ்வொரு இடங்களில் தங்கள் குடியிருப்பை அமைத்துக்கொள்ளும் போது, அந்த கூட்டத்திற்கு அல்லது அந்த மந்தைக்கு இடமளித்து காப்பாற்றவேண்டி, அங்கே வாழ்ந்துகொண்டிருக்கும் அந்த லோக்கல் சூப்பர் நேச்சுரல்/ஆதிமுதல் ஓனருக்கு பயந்து பயபக்தி கலந்த மரியாதையின் வெளிப்பாடு தான் இந்த மந்தை அம்மன். இது பிற்காலங்களில் தெய்வம் என்ற சொல்லால் பிறரிடம் கம்யூனிகேட் செய்ய சொல்லித்தரப்பட்டது.

இதுநாள் வரை இத்தகைய தெய்வங்களுக்கு தனி உருவமென்பது கிடையாது. அந்த பகுதியிலேயே கிடைத்த ஏதாவது ஒரு நீட்ட கல்லோ அல்லது முக்கோண வடிவிலான உருவம் போன்ற கல்லோதான் வணக்கத்திற்குரியதாக வைக்கப்பட்டிருந்தது. வருடத்திற்கு ஒரு முறை பங்குனி மாசத்தில் இவ்வகை தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து கொண்டாடுவதே அந்த மந்தையில் நடக்கும் மிகப்பெரிய திருவிழாவாக இருந்தது. இந்த தெய்வங்களுக்கென்று உண்டியல் கிடையாது, தனி(டெடிகேட்டட்) பூசாரி கிடையாது. மக்களோடு மக்களாக அவைகளும் எல்லாச் சண்டைகளிலும் பங்குபெற்று வசவு வாங்கியோ, சாட்சியாகவோ அல்லது பிற்காலத்தில் தண்டணை வழங்கும் ஊர் பெரியவராகவோ வாழ்ந்து கொண்டிருந்தது.

காலங்கள் உருண்டோடின. சைவ, வைணவ, சமண, புத்த, முகலாய, கிருத்துவ....இன்ன பிற மதங்களின் நேரடித்தாக்குதலில் அழியாத இந்த உள்ளூர்காரி இன்று தன் சொந்த மக்களால் முதுகில் குத்தப்பட்டு தூக்கி வெளியே வீசப்படும் நிலை வருமென்று யாரும் அவளுக்கு சொல்லவில்லை.

இன்றைய தலைமுறைக்கு கைக்குள் அடங்காத அளவு பணமும், மூளைக்கு மேல் உள்ள முடியும் சிந்திக்கும் அளவு அறிவும் வந்ததன் பலன், மந்தையம்மன், காளியம்மனின் மறு உருவமென்றும், இத்தனை நாள் வசதியில்லாததால், உருவமற்று கஷ்டப்பட்டாள் என்றும், அவளுக்கு புனர்ஜென்மமளித்து, இன்று அவளுக்கு உருவமளித்து, நல்ல கோயில் அமைத்து, அதற்கு சாஸ்திர சம்பிரதாயப்படி(?) பெருந்தெய்வ புரமோசன் கொடுத்திருக்கிறார்கள்.

இதை தட்டிக்கேட்க அவளுக்கு தைரியமில்லை, அவளுக்கு துணை நின்று இதை தடுத்து நிறுத்த எனக்கு நெஞ்சுரமுமில்லை.

நான் இன்று இதை எழுதுவதற்காக இத்தனை ஆயிரம் வருஷங்களாக என் வம்ச மூதாதையரை எல்லாம் காற்றிலும் மழையிலும் நோய் நொடிகளிலும் போர் பிரளயங்களிலுமிருந்து காத்ததன் பலனை இந்த ஒரு ப்ளாக் பேஜ் எழுதி விட்டு கையை தட்டிவிட்டு துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு என் கடன் தீர்ந்த திருப்தியுடன் என் பொழப்பை பார்க்கச் செல்கிறேன்!

Wednesday 7 December 2011

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

இதெல்லாம் பார்த்தா தொழில் பண்ணமுடியுமா! நீங்க வாங்க பாஸ்! இவய்ங்க எப்பவுமே இப்படித்தான்!

டேய்! எவனாவது எங்க சங்கு சாங்கியத்த பத்தி தப்பா பேசுனீங்க......

குருபீடம்!

யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

-கணியன் பூங்குன்றன்
(பாடல்192, எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய புறநானூறு) 


 English Translation

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Death's no new thing; nor do our bosoms thrill
When Joyous life seems like a luscious draught.
When grieved, we patient suffer; for, we deem
This much - praised life of ours a fragile raft
Borne down the waters of some mountain stream
That o'er huge boulders roaring seeks the plain
Tho' storms with lightnings' flash from darken'd skies
Descend, the raft goes on as fates ordain.
Thus have we seen in visions of the wise ! -
We marvel not at greatness of the great;
Still less despise we men of low estate."

Kanniyan Poongundran in Purananuru,
Poem 192 - written in Tamil 2500 years ago
English Translation by Rev. G.U.Pope in Tamil Heroic Poems

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
http://www.pattukkottaiyar.com/site/
http://astro.temple.edu/~dnavanee/PattuKalyan/biography.html

பிறப்பு வளர்ப்பு குடும்பம்
தமிழ் நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதி சுந்தரம் என்கிற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உள்ளனர். பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுடைய குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) இவர் அகால மரணம் அடைந்தார்.
எழுத்தாற்றல்
பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக இசைத்தார். இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது. 1955ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.
கம்யூனிஸ ஆர்வம்
இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார்.நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார். தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டு இறுதியில் கவிஞராக உருவானவர்.
கல்யாணசுந்தரம் அவர்களின் பன்பரிமாணங்கள்
விவசாயி
மாடுமேய்ப்பவர்
மாட்டு வியாபாரி
மாம்பழ வியாபாரி
இட்லி வியாபாரி
முறுக்கு வியாபாரி
தேங்காய் வியாபாரி
கீற்று வியாபாரி
மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி
உப்பளத் தொழிலாளி
மிஷின் டிரைவர்
தண்ணீர் வண்டிக்காரர்
அரசியல்வாதி
பாடகர்
நடிகர்
நடனக்காரர்
கவிஞர்
பட்டுக்கோட்டையாரின் முத்திரைக் கேள்வி (1959)
சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?

வாரணம் நூறு!

             சங்க இலக்கியத்தில் யானைக்கு வழங்கப்பட்ட பெயர்கள் >100            


யானை
வேழம்
களிறு -ஆண்யானை
மதகரி - மதம் பிடித்த ஆண் யானை.(திவாகர நிகண்டு)
பிடி - பெண்யானை
கரி
வாரணம் - புகர்முக வாரணம் (மணிமேகலை. 7, 115)
அஞ்சனம் - எண்திசை யானைகளுள், மேற்றிசை யானை(சூடாமணி நிகண்டு)
அஞ்சனை- எண்திசை யானைகளுள், வடதிசைப் பெண் யானை
அஞ்சனாவதி- எண்திசை யானைகளுள், வடகீழ்த் திசைப் பெண் யானை
சுப்பிரதீகம் - எண்திசை யானைகளுள்,வடகீழ்த் திசை யானை
புட்பதந்தம் - எண்திசை யானைகளுள், வட மேற்றிசை யானை. (தக்கயாகப். 118, உரை.)
வாமனம் - தென்றிசை யானை.(பிங்கல நிகண்டு)
புண்டரிகம் - எண்திசை யானைகளுள், தென்கீழ்த்திசை யானை. (பிங்கல நிகண்டு)
அத்தி - (பிங்கல நிகண்டு)
அத்தினி
அதவை - போர் யானை
அரசுவா
அல்லியன்
அனுபமை
ஆம்பல்
ஆனை 

இபம் - திசையிபச் செவி (கலிங். புதுப். 331).
இரதி
இராசகுஞ்சரம் / குஞ்சரம்
இருள்
தும்பு(சென்னைப் பேரகரமுதலி)
வல்விலங்கு
மாதங்கம்
உம்பல் - சான்று
உரலடி - கடுக்கை யுரலடிமீ துற்றானும் (தனிப்பாடல். i, 79, 158)

கலபம்

அருமணவன் - அருமணத் தீவின் யானை. (நன். 275, மயிலை.)

அல்லியன்- தன் குழுவைப் பிரிந்த யானை

உவா - 60வயதுக்கும் மேற்பட்ட யானை

எறும்பி/இறும்பு - (திவாகர நிகண்டு)

ஏந்துகொம்பன் - வளைந்த கொம்பையுடைய யானை

ஒற்றைக் கொம்பன் - ஒற்றைக் கொம்புள்ள யானை.

கொம்பன்யானை - பெரிய கொம்புகளுடைய யானை.

கோட்டுமலை - கொம்புகளுடைய யானை.

ஐராவணம் = நாகாதிபன் = நான்மருப்பியானை = வெள்ளானை = வெள்ளையானை = அப்பிரமா தங்கம்- இந்திரன் யானை, பட்டத்து யானை. (சீவக சிந்தாமணி. 3046, உரை.)

கசேந்திரன் - சிறந்த யானை.

குவலயாபீடம் - கஞ்சன் கண்ணனைக் கொல்லும் படி ஏவின யானை.

கடாசலம் - கடாசல வீருரி போர்த்தவர் (விநாயகபுராணம். சண்முகர். 3)

ஒருத்தல் - ஆண்யானையையும் குறிக்கும்.

ஓங்கல் - யானை. (அக. நி.)

கசம் - (கம்பராமாயணம். திருவவ. 22.)

கடிறு - கடிறுபலதிரி கானதரிடை (திவ். பெரியாழ். 3, 2, 6)

கயம் - கயந்தனைக் கொன்று (திருவாசகம். 9, 18).

கரபம் - ஒருநாற் றந்தக் கரபத்தி னண்ணல் (கந்தபுராணம். அச முகிந. 22)

கராசலம் - கராசலத்தின் வன்றோல் வியன்புயம் போர்த்தாய் (கந்தபுராணம் கந்தவி. 63)

கரிணி - பெண்யானை(பிங்கல நிகண்டு)

கருமா -

கரேணு - (திவாகர நிகண்டு,சூடாமணி நிகண்டு )

கள்வன் - பிங்கல நிகண்டு

களபம் - மதகரிக் களபமும் (சிலப்பதிகாரம். 25, 49)

கறையடி - பொழிமதக் கறையடி (கல்லா. 61, 22)

கஜம் = கெசம்

காட்டியானை - காட்டில் வாழும் யானை. (திவாகர நிகண்டு)

கொலைமலை - கொலைசெய்யும் யானை = போர்கள யானை. பெருமதக் கொலைமலை (கல்லா. 4)

கிரிசரம் - மலையிற் பிறந்த யானை. (திவாகர நிகண்டு)

குஞ்சரம் - குஞ்சரவொழுகை பூட்டி (பதிற்றுப்பத்து. 5, பதி.)

கும்பி - (திவாகர நிகண்டு)

குமுதம் - தென்மேற்றிசை யானை. (பிங்கல நிகண்டு)

குழவி - யானைக்கன்று. ஒருசார் விலங்கின் பிள்ளைப்பெயர். (தொல்காப்பியம். பொ. 575--579).

கைம்மலை - கையை உடைய மலை(அக. நி.)

நடைமலை - நடக்கும் மலையானை. நடைமலை யெயிற்றி னிடைதலை வைத்தும் (கல்லா. 12)

கைமா - பொலம்படைக் கைம்மாவை (பரிபாடல். 11, 52).

கோட்டுமா - கோட்டுமா வழங்குங் காட்டக நெறியே (ஐங்குறுநூறு. 282)

சத்திரி - யானை. (சங். அக.)

சாகசம் - யானை. (அக. நி.)

சாமோற்பவை - பெண் யானை (உரி. நி.)

சிந்துரம் - (சூடா.)

சுண்டாலம் - (யாழ். அக.)

சூகை - (அக.நிக)

தந்தாயுதம்

தந்தாவளம் - தந்தாவளசேனை (பாரத. நான்காம். 9).

தள்ளுமட்டம் - பெரிய யானைகளால் தள்ளப்பட்டு நடைபயிலும், யானைக்குட்டி.

தாப்பானை - புதிதாகப் பிடிபட்ட யானையைப் பழக்க, உபயோகப்படுத்தப்படும் பழகிய யானை.

தொடுவை - புதிய யானையைப் பயிற்றும் யானை

தாமம் - யானை. (சூடாமணி நிகண்டு)

திண்டி - (அக.நிக)

தீர்க்கமாருதம் - (யாழ். அக.)

தீர்க்கவத்திரம் - (யாழ். அக.)

தும்பி - (பிங்கல நிகண்டு.), தும்பியை யரிதொலைத் தென்ன (கம்பராமாயணம். வாலிவதை. 51)

துருமாரி - (யாழ். அக.)

துவரிதழ் - (அக.நிக)

துவிரதம் - இருகொம் புடைய யானை. (யாழ். அக.)

தூங்கல் - (திவாகர நிகண்டு)

தெட்டி - (அக.நிக)

தெள்ளி - (அக.நிக)

நகரகாதம் - (யாழ்.நிக)

நகரசம் - (யாழ்.நிக)

நதிசரம் - ஆற்றுச்சார்பாகப் பிறந்த யானை.(திவாகர நிகண்டு)

நாகம் - யானை. காள மேகமு நாகமுந் தெரிகில (கம்பராமாயணம். சித்திர. 2)

நாகவாரிகம் - அரசர் ஏறுதற்குரிய யானை.

நிருமதம் - (பிங்கல நிகண்டு) , மதமொழிந்த யானை. (சதுரகராதி)

நூ - (அக.நிக)

நூழில் (சூடாமணி நிகண்டு)

நெடுங்கை - நெடுங்கைப் பிணத்திடை நின்றான் (பு. வெ. 7, 13).

பகடு - பைங்கட் பணைத்தாட் பகட்டுழவன் (பு. வெ. 8, 5)
பஞ்சநகாயுதம்
பஞ்சநகம்
பட்டத்தியானை - இராச சின்னங்களுடையதும் அரசன் ஏறுவதற்கு உதவுவதுமான யானை.
பட்டவர்த்தனம் - அரச யானை. பட்டவர்த்தனமாம் பண்புபெற்ற வெங்களிறு (பெரியபுராணம். எறிபத். 11)
பண்டி (அக.நி.)
பவளக்கொம்பன்
பிக்கம்= யானைக்கன்று (யாழ். அக.)
பிணிமுகம்
பிரளயம்

பிள்ளுவம்

பீது - யானைத்திரளின் தலைமைபெற்ற யானை

புகர்முகம் - புலி யொடு பொரூஉம் புகர்முக வோதையும் (சிலப்பதிகாரம். 25, 29)

பூட்கை - பொன்றி வீழ்ந்த புரவிவெம் பூட்கை தேர் (கம்பராமாயணம். முதற்போ. 58)

புழைக்கை - (திவாகர நிகண்டு)

பூழ்க்கை - பூழ்க்கை முகன் மனுவை நனியெண்ணின் (விநாயகபுராணம். 14, 9).

பெருங்கை - பெருங்கைத் தொழுதியின் (பதிற்றுப்பற்று. 76, 6).

பெருமா - (பிங்கல நிகண்டு)

பென்னை - (சங். அக.)

பேசகி - (சங். அக.)

பேசிலம் - (யாழ். அக.)

பொங்கடி- பொங்கடி படிகயம் (அகநானூறு. 44)

போதகம் - போதகமொன்று கன்றி (கம்பராமாயணம். விபீடண. 113)

மகாகாயம் - (யாழ். அக.)

மகாதந்தம் - (யாழ். அக.)

மகாநாதம் - (யாழ். அக.)

மகாமிருகம் - (யாழ். அக.)

மத்தகுணம் - (யாழ். அக.)

மதங்கம் - (யாழ். அக.)

மத்தமா - மத்தம் பிணித்த கயிறுபோல் (கலித்தொகை. 110),(நிகண்டு.)

மத்தவாரணம் - மத்தவாரணம் பிடிகளோடு வாரிதோய் கானி யாறும் (பாரத. அருச்சுனன்றவ)

மதங்கயம் - மதிக்கு மதங்கய மனைய வரக்கன் (சேதுபு. பிரமகத். 7).

மதமா - (பிங்கல நிகண்டு)

மதவிருந்தம் - (யாழ். அக.)

மதாரம் - (யாழ். அக.)

மதாவளம் - (பிங்கல நிகண்டு)

மதி - கோண் மதித்திடர் கிடந்தன(கம்பராமாயணம். நாக பாச. 136)

மந்தமா - (சூடாமணி நிகண்டு)

மந்திரம் - யானை வகைகளில் ஒன்று (சுக்கிரநீதி, 307.)

மருண்மா - (திவாகர நிகண்டு)

மறமலி - (திவாகர நிகண்டு)

மா - (அக.நி.)

மாதிரம் - (பிங்கல நிகண்டு)

முத்துக்கொம்பன் - முத்து நிறமான தந்தமுள்ள யானை.

மையன்மா - (இலக். அக.)

மொய் - (பிங்கல நிகண்டு)

யாளி - (அக.நி.)

யானைத்தலைவன் - யானைக் கூட்டத்துள் தலைமைவகிக்கும் யானை. (மலைபடு. 297, உரை.)

யானைமுகவன் - வீரபத்திரக் கடவுள், விநாயகக் கடவுள் (சூடாமணி நிகண்டு)

யூதபம் - தன் கூட்டத்தைக் காக்குந் தலைவன் யானை. (பிங்கல நிகண்டு)

வயமா - வயமாத் தானவாரியும் (கம்பராமாயணம். ஊர்தேடு. 17)

வராங்கம் - (யாழ். அக.)

வருணம் - (யாழ். அக.)

வல்விலங்கு - (பிங்கல நிகண்டு)

வழுவை - (சூடாமணி நிகண்டு)

வியாளம் - கெட்டகுணமுள்ள யானை

விராணி - (சங். அக.)

வேதண்டம் - (பொதி. நி.)

அருணம் - (அக. நி.)

அழுவை - (அக. நி.)

அறுகு - ((பொதி. நி.)

இமழி - (அக. நி.)

உத்தரி - (அக. நி.)

ஊர்வரை - பொன்னூர்வரைதனில் (சிவப். பிரபந். கோடீச்சுர. 241)

ஏரம்பம் - (நாமதீப.)

ஓர்கை - ஓர்கை யுரியான் (கடம்பர். உலா, 364)

கரமை - (சங். அக.)

களம் - கொம்பில்லா யானை

கேழல் - (அக. நி.)

சூர்ப்பகன்னம் - (அக. நி.)


கோனாரின் மாணவனின் உரை!

சென்னைத் தமிழ் அருஞ்சொற்பொருள்!







கொச்சைச்சொல் சரியான சொல்

அட மழை ... அடைமழை
தாவாரம் ... தாழ்வாரம்
முழுங்கு ... விழுங்கு
அவைகள் ... அவை
கடப்பாறை ... கடப்பாரை
கத்திரிக்காய் ... கத்தரிக்காய்
கைமாறு ... கைம்மாறு
கோடாலி ... கோடரி
தலக்காணி ... தலையணை
இடது பக்கம் ... இடப்பக்கம்
புஞ்சை ... புன்செய்
பதட்டம் ... பதற்றம்
நோம்பு ... நோன்பு
ஒருவள் ... ஒருத்தி்
அருகாமையில் ... அருகில், அண்மையில்
அதுகள் ... அவை
வெண்ணீர் ... வெந்நீர்
சிகப்பு ... சிவப்பு
பண்டக சாலை ... பண்டசாலை
புண்ணாக்கு ... பிண்ணாக்கு
ரொம்ப ... நிரம்ப
வத்தல் ... வற்றல்
பேத்தி ... பெயர்த்தி
பேரன் ... பெயரன்
வலது பக்கம் ... வலப்பக்கம்
கடக்கால் ... கடைக்கால்
ஊரணி ... ஊருணி
பாவக்காய் ... பாகற்காய்
சாணி ... சாணம்
திருவாணி ... திருகாணி
சீயக்காய் ... சிகைக்காய்
சுவற்றி்ல் ... சுவரில்
முயற்சித்தார் ... முயன்றார்
எண்ணை ... எண்ணெய்