Saturday 6 October 2012

தங்கத் தமிழ் நாட்டினிலே....



"தமிழனை ஏமாளியாக்கும் புதுத் திட்டம் - கட்டாயம் படியுங்கள் பரப்புங்கள்"


இணையதள நண்பர்களே இது நீங்கள் கட்டாயமாக படிக்கவேண்டிய செய்திபடித்துவிட்டு அனைத்து தமிழ் வாழ் நேசங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்(Please SHARE or TAG Tamil friends). விழிப்புணர்வை தூண்டுங்கள்நமக்கு உணவளிக்க நாள் முழுவதும் பாடுபடும் விவசாய மக்களுக்கு ஆதரவு தாருங்கள்

புதுதிட்டம்:
நதிநீர், மின்சாரம், மீனவர் பாதுகாப்பு, அரசியல
் பிரதிநிதித்துவம் என்று எல்லாவற்றிலும் இரண்டாம்தர குடிமக்களாய் நடத்தப்படும் தமிழகத்தின் ஏமாளிதனத்தின் இன்னொரு அடையாளம் கெயில் (GAIL) காஸ் லைன் பதிப்பு திட்டம்.
கேரளா-கொச்சியில் இருந்து கர்நாடக-பெங்களூருவிற்கு தமிழ்நாடு வழியாக காஸ்லைன் செல்கிறது. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிப்படைகின்றனர். காஸ் விற்பதால் வரிப்பயன்&வேலை பெறுவது கேரளா, அதை வாங்கி பயன்படுத்துவது கர்நாடகா இருந்தும் நம் நிலங்களுக்குள் பைப்லைன் வர காரணம் அம்மாநில விவசாயி/அரசு எதிர்பா? இல்லை தமிழர் என்ற இளக்காரமா..??

ஏழு மாவட்ட(!) விவசாய நிலங்களுக்குள் இந்த பைப் செல்வதால் அந்த நிலத்தில் விவசாய கட்டுப்பாடு வரும். அதாவது தண்ணீர் பாய்ச்சகூடாது; மழை பெய்தால் அதைக்கொண்டு பயிர் செய்யலாம்; உழுதல் கூடாது; மரம்,வீடு,ரோடு கூடாது. அந்த பைப்லைனுக்கு பாதிப்பென்றால் அந்த விவசாயிதான் பொறுப்பு! எப்படி நியாயம்?? இதற்கு அவர்கள் தரும் இழப்பீடு ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய்!

ஒரு வயதான விவசாயி, நில உரிமையாளர், நிலத்தில் அத்துமீறி நுழைந்து குழி பறிப்பதும் நிலம் அளப்பதும் கண்டு கேள்வி கேட்டவரை திஹார் ஜெயிலுக்கு போறியா?? XXX, ஓடீறு..!!”. கூலிக்கு இருக்கும் ஒரு கடைநிலை ஊழியனுக்கே இவ்வளவு துணிச்சல் எனில் அந்த நிர்வாகத்துக்கு தமிழ்விவசாயி என்றால் எவ்வளவு அலட்சியம் கற்பிக்கபட்டிருக்கும்?
தமிழகம் வழியாக வரகூடாது என்ற கழுதை கோரிக்கை தேய்ந்து, ரயில் தட ஓரத்திலும், நெடுஞ்சாலை ஓரங்களிலும் கொண்டு செல்லுங்கள். விவாசயத்தை அழிக்காதீர்கள், விவசாயிகளுக்கான கட்டுபாடுகளை தளர்த்துங்கள் என்ற கட்டெறும்பு கோரிக்கை வைத்தாலும் ஏற்க மறுக்கிறார்கள். இவர்கள் சொல்லும் காரணம் தமிழகம் வழியாக வந்தால் 310கிமீ; கேரளா, மைசூரு வழியாக வந்தால் 470கிமீ. ஆனால் வரைபடத்தை பார்த்தால் எது குறைந்த தூரம் என்பது விளங்கும். அந்த பாதையைவிட தமிழக பாதையில் மலைகளும் வனப்பகுதியும் அதிகம்.

விவசாய நிலத்துக்குள்தான் ரோடு, ரயில், ரியல்எஸ்டேட், காஸ்லைன், தொழிற்சாலை அனைத்தும் வருமா? இதற்கான போராட்டம் வலுத்து வரும் நிலையில் அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளிக்க வேண்டும். எல்லா மாவட்ட விவசாயிகளும் வேறுபாடுகள் மறந்து ஓரணியில் நிற்க வேண்டும். இணைய தமிழர்களும் தங்கள் ஆதரவை காட்ட வேண்டும்.

Source: I love Tamilnadu 


தினமலர், மார்ச் 25, 2013


சென்னை: ""கெயில் நிறுவனம், விளைநிலங்கள் வழியாக, எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டத்தை, உடனடியாக கைவிட வேண்டும். வேளாண் நிலங்களில் பாதிக்காத வகையில், நெடுஞ்சாலைகளின் ஓரம், எரிவாயு குழாய்களை பதிக்க, கெயில் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.
சட்டசபையில், பட்ஜெட் மீதான பொது விவாதம், நேற்று துவங்கியது. கேள்வி நேரத்திற்குப் பின், தி.மு.க., உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., டில்லிபாபு, புதிய தமிழகம் எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி ஆகியோர், கெயில் விவகாரம் தொடர்பாக, விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
ஏழு மாவட்டங்கள் பாதிப்பு: இந்த விவாதங்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா அளித்த பதில் உரை: தமிழக அரசு, மக்களுக்காக இயற்றப்படும் சட்டங்கள் மற்றும் வகுக்கப்படும் திட்டங்கள், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதில், கண்ணும், கருத்துமாக இருந்து வருகிறது. கேரள மாநிலம், கொச்சி திரவ எரிவாயு முனையத்தில் இருந்து, பெங்களூரு வரை, தமிழகத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய, ஏழு மாவட்டங்களின் விவசாய நிலங்களின் கீழே, 310 கி.மீ., தூரத்திற்கு, எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்கும் பணியை மேற்கொள்ள, கெயில் நிறுவனம் திட்டமிட்டது.
விவசாயிகள் எதிர்ப்பு: இருபது மீட்டர் அகலத்தில், குழாயை பதிக்க, 5,842 பட்டாதாரர்களுக்கு சொந்தமான, 1,491 ஏக்கர் நிலத்தின் பயன்பாட்டு உரிமையை பெற, கெயில் நிறுவனம், நடவடிக்கை எடுத்தது. இதற்கான இழப்பீட்டுத் தொகை, நிலத்தின் சந்தை மதிப்பில், 10 சதவீதம் ஆகும். இத்திட்டம், விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக செயல்படுத்தப்படுகிறது என்றும், இதனால், விவசாயிகளுக்கு, பெரும் இழப்பு ஏற்படும் என்றும், ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த மாதம், 28ம் தேதி, அமைச்சர்களுடனும், உயர் அதிகாரிகளுடனும், நான் ஆலோசனை நடத்தினேன். சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி, விவசாயிகளிடம், கருத்துகள் கேட்கப்பட்டன. தலைமைச் செயலர் நடத்திய இந்த கூட்டங்களில், 134 கிராமங் களில் இருந்து, 2,428 விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். "எரிவாயு குழாய் அமைப்பதால், சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரம், மிகக் கடுமையாக பாதிக்கப்படும். விவசாய நிலத்தின் பெரும்பகுதி பயன்பாட்டு உரிமையை, கெயில் பெறுவதால், எங்கள் நிலத்தில் விவசாயம் செய்ய இயலாமல், நிலத்தின் பெரும் பகுதியை இழக்க நேரிடும்' என்பது உள்ளிட்ட, 10 கருத்துகளை வலியுறுத்தி உள்ளனர்.
கெயிலுக்கு என்ன பிரச்னை...: கடந்த 8ம் தேதி, கெயில் நிறுவனம், தமிழக அரசு தலைமை செயலருக்கு அனுப்பிய கடிதத்தில், தேசிய நெடுஞ்சாலைவழியாக, குழாய் பதிக்கும் திட்டத்தை மேற்கொண்டால், என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என்பதை, விளக்கமாக கூறி உள்ளது. நிறுவனத்தின் கருத்துகள் மற்றும் விவசாயிகளின் ஆட்சேபனைகள் ஆகியவற்றை, தமிழக அரசு, கவனமாக பரிசீலித்தது. தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொள்ள முடியாததற்கு, வலுவான தொழில்நுட்ப காரணங்கள் எதையும், கெயில் நிறுவனம் தெரிவிக்கவில்லை. மாறாக, விவசாயிகள், தங்கள் வாழ்வாதாரம், எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை, தெள்ளத் தெளிவாக கூறி உள்ளனர். விவசாயிகளின் வீழ்ச்சியில், தொழில் வளர்ச்சி ஏற்படுவதை, நியாய உணர்வு கொண்ட யாரும், ஏற்க மாட்டார்கள். ஒரு திட்டத்தால் பாதிப்பு ஏற்படும் எனில், அதனால், யாருக்கு, எவ்வளவு பாதிப்பு என்பதையும், தேச நலன் எவ்வளவு பாதிக்கப்படும் என்பதையும் கருத்தில் கொண்டே, முடிவு எடுக்க வேண்டும். அந்த அடிப்படையில், ஆழ்ந்து சிந்தித்து, ஒரு முடிவை எடுத்து உள்ளோம். தேசிய நெடுஞ்சாலை வழியாக, குழாய்கள் பதிக்கும் பணிகளை மேற்கொண்டால், திரவ எரிவாயு, தொழிற்சாலைகளுக்கும், மக்களுக்கும் கிடைப்பது உறுதி செய்யப்படுவதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும்.
வாழ்வாதாரம் பாதிக்கும்:
* எனவே, கெயில் நிறுவனம், விவசாய விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்கும் தற்போதைய திட்டத்தை, உடனடியாக கைவிட வேண்டும்.

* குழாய்களை, தமிழக விவசாயிகளின் வேளாண் நிலங்கள் பாதிக்காத வகையில், நெடுஞ்சாலைகளின் ஓரமாக பதிப்பதற்கு, கெயில் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* கெயில் நிறுவனம், ஏற்கனவே குழாய்களை பதிக்க, நிலங்களில் தோண்டியுள்ள குழிகளை, உடனடியாக சமன்படுத்தி, அந்நிலங்களை, அதன் முந்தைய நிலையில், விவசாயிகளிடமும், நில உரிமையாளர்களிடமும் ஒப்படைக்க வேண்டும்.

* விவசாயிகள், விவசாயப் பணிகளை தொடரும் வகையில், ஏற்கனவே பதித்த குழாய்களை, உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

* இத்திட்டத்தால், பழ வகை மரங்களையும், பிற கட்டுமானங்களையும் இழந்து வாடும் விவசாயிகளுக்கும், நில உரிமையாளர்களுக்கும், உரிய இழப்பீட்டை, கெயில் நிறுவனம் வழங்க வேண்டும்.

* தமிழக அரசின் முடிவுகள், ஐகோர்ட்டில் தெரிவிக்கப்படும்.

* தேசிய நெடுஞ்சாலை வழியாக, குழாய் பதிப்பு நடவடிக்கைகளை, கெயில் நிறுவனம் மேற்கொள்ளலாம். இதன் தொடர்ச்சியாக, தமிழகத்திற்கு, திரவு எரிவாயு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளையும், கெயில் நிறுவனம் எடுக்க வேண்டும்.

* திட்டம் தொடர்பாக, விவசாயிகள் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும், திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

* திட்டத்திற்காக, மக்கள் அல்ல; மக்களுக்காகவே திட்டம் என்பதில், தமிழக அரசு உறுதியாக உள்ளது. மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும், தமிழக அரசு, உடந்தையாக இருக்காது. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

பி.கு: ஒரு செய்தியை அது முற்றுப்பெறும் வரை தெரிந்துவைத்திருக்கவேண்டுமென்பது என் ஆசை. அதன் விளைவுதான் இந்த முயற்சி.

நன்றி!

2 comments:

  1. தாய்மனம்6 October 2012 at 04:56

    நாம் மீண்டும் மீண்டும் ஏமாற்ற படுகிறோம்

    காரணம்

    எதிர்த்து போராடும் குணம் இல்லை தமிழ் இன மக்களிடம்

    ReplyDelete
  2. கொடநாட்டிலிடுந்து அல்லது கொச்சியிலிருந்து நீங்கள் குறிப்பிட்டுள்ள பாதை மலை வழியாகும். சமதளம் என்றால் அவர்கள் குறிப்பிட்டுள்ள பாதைதான் சரி.

    ReplyDelete