Friday, 13 April 2012

இழப்பதற்க்கென்று இறுதியாய் ஒன்று...





பேய் மழையென்று யாரோ சொன்னது அப்போதுதான் நினைவுக்கு வந்தது கூந்தையனுக்கு! இருட்டுக்குள் மெல்ல நகர்ந்து சரிந்து வந்தவனுக்கு ஓரமாக ஒண்டிக்கொண்டிருந்த பூங்கொடியின் கை தட்டுப்பட்டது. ஐயோ! ராசா ஒனக்கு இன்னுமா ஒரக்கம் வரலை, கூரை ஓம்பக்கம் ஒழுகலைன்னு நெனைச்சேன், ஒழுகுன தண்ணி ஒன்னிய உசுப்பு விட்ருச்சாயா? வாயா வா! வந்து ஆத்தா மடிமேல படுத்துக்கஎன்று விம்மிய நெஞ்சுடன் வாரியணைத்து மடிமீது வைத்து உடல் குறுக்கி, இதமாய் உறங்கவைத்தாள்.

காக்காயன் ஓடிவந்தான். கூந்தையா! ஒங்கப்பன கல்லு போட்டு அமுக்கி கொண்டுபுடுச்சாம்டா! கொவாரில வேட்டு வச்சப்ப!என்று மூச்சிரைக்க சொல்லி முடித்தான். அவன் நம்மை ஏதோ சொல்லி திட்டுவது போல் தோன்றியதோ என்னவோ, அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது. இழ்ந்தது எதுவென்றே தெரியாமல் முதன் முதலாக அவன் அழுதுகொண்டே தெரு நெடுகிலும் பிஞ்சுக்கால்களை புழுதியில் பதித்தபடி அம்மாவைத் தேடி ஓடிக்கொண்டிருந்தான்.

ரெண்டாங்கிளாஸ்ல யாருடா கூந்தையன்றதுஅலறினார் செம்பட்டை வாத்தியார். எல்லோர் முன்னிலையிலும் தன்னை மட்டும் அவர் பேர்சொல்லி கூப்பிட்டதில் கை கால்கள் வெடவெடக்க எழுந்து நின்றவனுக்கு, என்ன நடந் த தென்றே தெரியவில்லை. கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டிருந் த து. காதெல்லாம் ஏதோ ஒரு நிசப்த ரீங்காரம் அரங்கேறிக்கொண்டிருந்தது. காக்காயன் எழுந்து இருவரின் மஞ்சப் பைகளையும் தேடி எடுத்து சிலேட்டைத் திணித்துக் கொண்டு இவனையும் பிடித்து இழுத்தவாறு நடந்தான். வீடு நெருங்க நெருங்க விருட்டென்று விலக்கிக்கொண்டு அம்மா என்றவாறு தாயிடம் அடைக்கலம் தேடிச்சென்றவனை, சுற்றி உட்கார்ந்து அழுதுகொண்டிருந்த பெண்கள் தடுத்து நிறுத்தி, ஒங்காத்தா ஒன்னிய நட்டாத்துல விட்டுட்டு போயிட்டாடான்னு சொன்னது மட்டும் அழுத்தம் திருத்தமாய் ஒலித்தது ஓலங்களுக்கிடையே!

நாலு வருசத்துல ரெண்டு எழவாடா ஒங்க வீட்டுல? எதுக்கும் நீ நாளைக்கிருந்து எங்கூட கல்லொடைக்கிற எடத்துக்கு வா! ஓன் தம்பிக்கும் ஒனக்கும் அங்கயே கூலு கரைச்சு கொண்டுக்கு வந்துர்றேன். இங்கணயே ஒக்காந்து கஞ்சிக்கி வீடுவீடாப் போயி கையேந்திக்கிட்ருக்காதீங்கடா!அதிகாரமாய் ஒலித்தது சூடாமணி கிழவியின் ஆதங்கம். அப்பன் ஆத்தா உறுதுணை இல்லைன்னாலும் கிழவிகளுக்குப் பஞ்சமில்லைடா இந்த ஊருல! தங்கத்தாயி ஆத்தா வெளித்திண்ணையிலிருந்து!

எங்க போனான்டா ஓந்தம்பி சப்பானி! கெரட்டையன் மகள் வீரம்மாள கழுத்தறுத்துப் போட்டுட்டு போயிருக்கான்டா. ஊருக்குள்ள ஒங்கள வெறிபுடுச்சுத் தேடிக்கிட்ருக்காய்ங்கடா எளந்தாரிகளெல்லாம்! வேகமா ஓடியாடா!வென்று வெரசுபடுத்திக்கொண்டு முன்னே ஓடிக்கொண்டிருந்தான் காக்காயன். வெட்டுப்பட்டுக் கை கால்களெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடந்தவைகளெல்லாம் ஒவ்வொன்றாய் இணைத்து தம்பியாய் அடையாளப்படுத்தும் முயற்ச்சிகள் நடந்துகொண்டிருந்தன.

கல்யாணத்தன்னிக்கு ஒன்னிய கூப்புட வேணாமுன்னு எங்காத்தாகாரி தான்டா எழவக்கூட்டிட்டா! அந்த வெளங்காத பய வம்சத்துல சாவுகாசம்(சகவாசம்) வைக்காதடான்டா! கேக்குறானா? ஒனக்கு எவனும் இத்தனை வருசமா பொண்ணுகுடுக்காததுக்குக்கூட நீயும் அவனும் சேர்ந்து சுத்துறது தான்டா காரணம்! ஏலே! சொன்னதக்கேக்கலன்னா இங்கனயே நாண்டுக்கு செத்துப் போவன்டா! கூந்தையனின் சமூக அடையாளத்தைப் பற்றித் தெளிவுபடுத்திக் கொண்டிருந்தான் காக்காயன். இருந்த வீட்டையும் காக்காயனுக்கு தாரைவார்த்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக்கொண்டிருந்தான் கூந்தையன்.

எலும்பும் தோலுமாய் இருந்த கிழவரிடம், டாக்டரய்யா, பேரென்னப்பா? என்றவுடன் இருமலைத் தொடர்ந்ததொரு ஈனஸ்வரம் கரைந்தது கூந்தையனென்று. டிபி சீக்கு முத்துறவரைக்கும் என்ன பெரிசு பண்ணிக்கிட்ருந்த? சரி சரி! போ! போயி நர்ஸம்மாகிட்ட இந்த ஊசியும் மாத்திரையும் எடுத்துத்தரச்சொல்லி வாங்கிக்கிட்டுப் போ! எந்த மாத்திரையா இருந்தாலும் வகுத்துக்கு கஞ்சியோ கூலோ குடிச்சிட்டு முழுங்கு! புவர் பெல்லோ!

என்ன மாயம் நடந்ததோ தெரியவில்லை, முத்து முத்தாக பத்து தூக்கமாத்திரைகள் கையில் நிறைந்து வழிந்து கொண்டிருந்தன. சிறுகச்சிறுக தன்னை தனித்துப் பிரித்து, இறுதியில் இருப்பதற்கொரு பெரிய சத்திரத்தையும் 4நாள் பசிக்காக பத்து மாத்திரைகளையும் சிருஷ்டித்த கடவுளைப் பார்த்து கடைசியாக ஏதோ சொல்ல நினைத்தவன், சுதாரித்துக்கொண்டு, கையைவிட்டுப் போவதற்குளாகவே அவசர அவசரமாய் முழுங்கிவிட்டான் மாத்திரை வரங்களை!

சத்திரத்தைக் கூட்டுமொரு பரதேவதை வந்து உற்றுப் பார்த்துவிட்டு, நிலைகுத்தி நின்ற கண்ணும், நெடுஞ்சாண் கிடப்பும், நெற்றியின் வெளிர்ப்பும், மந்தாகசப் புன்முறுவலும், மார்புக்கூடும் உற்றுப் பார்த்து ஒப்புவைத்தாள், ஊருக்கே கேட்குமாறு நெஞ்சில் அடித்துக்கொண்டு..., 

....யாத்தே! எந்தக் காட்டுப் பெயமகனோ? எந்தச் சிறுக்கி பெத்துப் போட்டாலோ? இப்பிடி அனாமத்தா அனாதப் பொணமா கெடக்கானே சிய்யான்!
தேர்கட்டித்தூக்க ஒனக்கெத்தன பிள்ளையோ!? தீப்பந்தம் புடிக்க எத்தன பேரனோ!?
எத்தனை ஊரக் கட்டி ஆண்டயோ? எத்தனபேரு ஒனக்கு சேவகம் செஞ்சாய்ங்களோ? எந்தூரு ராசாவோ?
........

இழப்பதற்கென வேறொன்றுமில்லையென்பேனென நினைத்தாயோ பரமனே!
இறுதியாய்! இதோ உனக்காய், ஆர்ப்பரிக்கும் கடலுடன்! அழகிய வனங்களுடன்! ஆயிரம் வேதனை சுமக்கும் மாந்தர்களுடன்! நான் வாழ நீ படைத்த உலகு உனக்கே!
ம்! நிமிர்ந்து பார்! வாங்கிக்கொள்!

2 comments:

  1. எங்கயோ போய்டீங்க். . .

    ReplyDelete
  2. அருமையான நம் மண்வாசனைக்கே உரித்த சொல்லாடல்கள்..,
    அதைவிட கூந்தையனின் குடும்ப சூழல்..
    நிதர்சனம்.
    கண்ணு முன்னாலே நிப்பாட்டிட்டே மாப்பிளே..!

    ReplyDelete