Thursday, 29 December 2011

பிரபல பெண் டிவிட்டரின் பார்வையில்...

 

பிரபல பெண் ட்விட்டர் அனு அவர்களின் பார்வையில் இன்றைய உலகம். அவரின் மனம் திறந்த வெளிப்படையான பதில்களை இங்கே காணலாம்.

1)   உலகம் உங்களை எவ்வாறாக அறியப்படவேண்டுமென விரும்புகிறீர்கள்?
               நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையாய்....பாரதியின் புதுமைப்பெண்போல் இருக்கத்தான் ஆசை . 
2)  உங்களுக்கு பிடித்த உலகம் எவ்வாறாக இருக்க வேண்டுமென விரும்புகிறீர்கள்?
    பொய், புரட்டு, ஊழல் இல்லாத நேர்மையான சமுதாயமாக.
 
3)      உங்களுடைய கடந்தகால நினைவுகளில் முக்கியமானவை?
     என் இனிய தோழிகளுடன் பழகிய கல்லூரி வாழ்க்கை . 
 
4)      நீங்கள் வெகுகாலமாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் காரியம்?
        ம்ம்ம்...அப்படி எதையும் அதிகமாக எதிர்பார்ப்பதில்லையே. 
 
5)      வாழ்க்கை பற்றிய உங்களது தத்துவம்?
         வாழ்க்கை இனியதுதான். அது இனிமையாவதும், சுமையாவதும் நம் கையில்   தான் இருக்கிறது என்பது உண்மைதான்.
 
6)      ட்விட்டருக்கு நீங்கள் வந்ததன் நோக்கம்? அது கிடைத்ததா?
         ம்ம்ம் ட்விட்டர் மிக பிரபலமானதால் இதில் இணையும் எண்ணம் வந்தது. 
 
7)     பெண் ட்விட்டர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை? 
            அறிவுரை கூறுமளவிற்கு  எனக்கே அனுபவம் இல்லை இங்கே .

8)     ஒரு பெண் ட்விட்டராக நீங்கள் சந்தித்த சிறந்த, மோசமான ட்விட்டர் தருணங்கள்?
           சிறந்த தருணங்கள்...இங்கு சில நல்ல தோழமைகள் கிடைத்தைச் சொல்லலாம். மோசமான தருணங்கள்  இங்கும் சில மனிதம் இல்லாத மனிதர்களைக் காணும்போது .    
             
9)     ஆண் ட்விட்டர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
         ஆண்களுக்குச் சொல்லும் அளவிற்கு நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை .

10)   பொதுவாக ட்விட்டர் பற்றிய உங்களது ஆராய்ச்சி முடிவு?
         விஷயங்களைப் பகிர்வதில் மிக அருமையான தளம் .



11)   உங்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு?
         புத்தகங்கள், இசை, ஓவியம், கவிதை...இந்த வரிசையில் இப்போது கணிணியும்.


12)   ஒரு நாளிற்கான உங்களது செயல்களை விளக்கவும்?
        ----


13)   வெளியே சுற்றுவது/வீட்டில் இருப்பது இவற்றில் நீங்கள் அதிகம் விரும்புவது?
       சுற்றுலா செல்வது, பார்க்காத இடங்களை, அதன் சிறப்பியல்புகளோடு பார்ப்பது பிடித்தமான விஷயம் .

14)   தூக்கம் பற்றிய உங்கள் கருத்து?
         தூக்கம்.......மனிதனுக்கு சரியான அளவில் தினமும் தேவைப்படும் ஓய்வு .   சாவுக்கான ஒத்திகை என்றும் சொல்லலாம் .

15)   காதல் பற்றிய உங்களுடைய செய்தி?
         ஆழ்மனதில் தோன்றும் பரிசுத்தமான நேசம். இதைக்கொச்சைப்படுத்துபவர்கள் நரகத்திற்குச் செல்லக்கடவது !

16)   ஆண் பெண் நட்புகளின் வரைமுறையாக நீங்கள் குறிப்பிடுவது?
         வரைமுறை அவரவரின் மனதிற்குத்தான் தெரியவேண்டிய விஷயம் .
17)   பெண்களின் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பவைகள்?
          சில நேரம் பெண்களேதான். அவர்களது நுட்பமான மனத்தடைகள்.

18)   இன்றைய காளையர்க்கும் வனிதையர்க்கும் உங்களின் வழிகாட்டுதல்?
        வழிகாட்டும் அளவிற்கு நான் ஒன்றும் வளரவில்லையே :(

19)   பெண்விடுதலை, கருத்து சுதந்திரம், சமுதாயத்தின் மரியாதை பற்றி?
        பெண்விடுதலை இன்னும் ஆண்களின் கையில் இருப்பதாகச் சொல்வதை ஏற்றுக்கொள்வதில்லை.
         மற்றவரை பாதிக்காத கருத்துகளுக்கு எப்போதும் சுதந்திரம் தான் இங்கே :)
         சமுதாயத்தின் மரியாதை ஒருவரிடம் இருக்கும் செல்வத்தை மட்டுமே அளவிடுகிறது.. அவர்களின் மனதை பார்த்து அளவிடும்போதுதான் அது நிஜமான மரியாதையாக இருக்கும் .

20)   பெண்களை கவர 4 டிப்ஸ்?
     உண்மையாக இருப்பதும், உரிய மரியாதை கொடுப்பதும், ஒரு விஷயத்தை பிரச்னையை சமாளிக்கும் பக்குவமும், நாகரிகமாக இருப்பதும்,  எப்போதும் பெண்களைக் கவரும்.

21)   ஆண்களிடம் எதிர்பார்க்கும் 4 நல்ல குணங்கள்? வெறுக்கும் 4 கெட்ட குணங்கள்?
        மேலே சொன்னவையே எதிர்பார்க்கும் குணங்கள்.
         வெறுப்பவை இதற்கு எதிர்ப்பதங்கள் தான் :)))

       (ஒரே கேள்வி ரிபீட் அடிக்கறீங்களே சாரே :( (கலாய்ச்சிட்டாங்களாமாம்! )


22)   செல்போன், கம்ப்யூட்டர், வெளியூர் வேலை போன்றவற்றால் குடும்பம், சொந்தம், நட்பு போன்றவை அடைந்த நிலை?
         நட்பும், சொந்தமும் இந்த தொடர்புசாதனங்களால் வளரத்தான் செய்கிறது. 
குடும்பத்திற்குச் செலவிட தான் நேரம் கிடைப்பதில்லை நமக்கு :(

23)   ஜெயலலிதா, சோனியா காந்தி... தலைமைப் பண்புகளாக நீங்கள் காணும் குணங்கள்?
       ஜெயலலிதாவின் தைரியம், துணிச்சல், அறிவுக்கூர்மை - நிச்சயமாக இவையாவும் தலைமைப்பண்புகள்தான்.
மற்றவரிடம் அத்தகைய பண்புகள் எதையும் காணவில்லை - மன்னிக்கவும் !

24)   ஒரு ஞான குருவாக நீங்கள் உலகத்துக்கு சொல்லவிரும்பும் மற்ற செய்திகள்?

 மன்னிக்கவும் :)



நீதி: போய் பிள்ளைகுட்டிய படிக்க வையுங்கடா!

Monday, 26 December 2011

அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்!



ஊர்கூடித் தேர் இழுப்போம் என்பதே ஊரை ஒன்றாக்கத்தான். தேரை இழுப்பதற்காக சொல்லப்படுவதல்ல. ஆனால் ஊர்கூடிச் செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்கள் மிகச் சொற்பமானவையே!

ஊர் ஓட சேர்ந்து ஓட வேண்டும்! என்ற பழமொழி மட்டுமே இன்று அதிகம் பின்பற்றப்படுகிறது. திரும்பி நில்! துணிந்து செல்! எதிர்த்துப் போரிடு! என்பவையெல்லாம் எவர் காதுக்கும் எட்டுவதில்லை! இதை கண்கூடாக காண விரும்புவோர் இணையதளங்களில் நிகழும் முல்லைப் பெரியார் அணை பற்றிய விவாதங்களைப் பார்த்தாலே புரிந்து கொள்வீர்கள்.

போராட்டம் என்பது ஜனநாயக உரிமையேயன்றி, சட்ட விரோதச் செயல் அல்ல என்பதே மெத்தப்படித்த பலருக்குப் புரிவதில்லை. போராளிக்கும், தீவிரவாதிக்கும் வித்தியாசங்களை இவர்களுக்கு சொல்லித்தராத நம் தமிழ்த்தாத்தாக்களையே முதலில் சாட வேண்டும். போராட்டம் என்றால் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு காட்டு வழியே ஒழிந்து திரிந்து வாழ்பவர்களுக்கான ஒரு இனச்சொல் என்று இவர்களின் மூளைதான் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கவேண்டும்.

ஒரு நாட்டின் வரலாற்றில் புரட்சி என்பது எத்தனை முக்கியமானதொரு சடங்கு என்பதை இந்தக்கால இண்டர்நெட் தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பில்லை தான். இவர்களுக்குத் தான் இரவைப் பகலாக்க பல வளைத்தளங்கள் நவரச விருந்து படைத்துக்கொண்டிருக்கின்றனவே!

முல்லைப்பெரியார் அணைப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட மாவட்ட மக்கள் மட்டுமல்லாது, ஈரோடு, கோவை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், சென்னை என அனைத்து மாவட்ட மக்களும் தங்களின் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்திய விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. போராட்டக்காரர்களின் பங்கு ஒருபுறமிருக்க வணிகர்களும், பொதுமக்களும் இதில் ஒத்துழைத்த விதம் நம் மக்களிடம் இன்னும் அந்த பேராண்மை தீர்ந்துவிடவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாய் “எங்களோட இந்த வருஷ வெள்ளாமை வெளையலன்னு நெனச்சிக்கிறோம்! எங்க பிள்ளைகுட்டிகளெல்லாம் பிற்காலத்துல நல்லா இருக்கணும்ங்கிறதுக்காக” என்று சொன்ன விவசாயியின் உணர்வில் தெரிவது அவனுடைய பெருந்தன்மை மட்டுமல்ல அவனின் பொதுநலப் பொறுப்பும் ஆகும்.

இவ்வாறு ஒரு மறுமலர்ச்சியின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் வெவ்வேறு ரூபங்களில் பங்களித்த உங்கள் அனைவருக்கும் என் நன்றியை சமர்ப்பிப்பதோடு இந்த மாற்றத்தை கைவிட்டுவிடாமல் தொடர்ந்து உங்கள் பெருங்குணத்தை உலகிற்கு பறைசாற்றிட வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.
"Great works are performed, not by strength, but by perseverance." Samuel Johnson 

இப்படிக்கு




இறுதியாய் ஒரு வரம்!

 ஒழுகாத வானம்
தகிக்காத பூமி
சுழிக்காத காற்று
சுடரொளிச் சூரியன்
விரட்டாத மழை
வீதியெல்லாம் நிழல்
...இவையாவும் வேண்டேன்!

நொடிப் பொழுதேனும்
பயக்குறி நீக்கி
விழித்திரை மூட
வீடொன்றன்றி வேறென்
கேட்பேன் பராபரமே!

Saturday, 10 December 2011

உள்ளூர் தெய்வங்கள் - 2

இந்த பதிவு என் சொந்த ஊரைப் பற்றியது. எங்கள் பகுதியில் தந்தை பிறந்த ஊரையே சொந்த ஊராக சொல்லிக்கொள்வோம்(பூர்வீகம்).

எங்கள் ஊரில் இந்து என்ற வார்த்தையோ கடவுள் என்ற வார்த்தையோ பாடப்புத்தகத்தின் வாயிலாகவே நுழைந்திருக்கும். அதுவரை எங்கள் ஊரை காப்பது, எங்களுடன் எப்போதும் துணையாக நிற்பது எங்கள் முன்னோர்கள் நிறுத்திச் சென்ற இந்த நடுகல் நம்பிக்கைகள்(ல்) தான்.

ஊரின் மத்தியில் ஒரு மந்தையம்மன். அடுத்து ஒரு சங்கிலி கருப்பு. அவ்வளவுதான்.

ஊரில் நிலைத்து வாழ மந்தையம்மனின் தயவு வேண்டும். மந்தையம்மன் என்றும் வேறு வேலைகளுக்கு வருவதில்லை. அது ஊரைக்காக்கவும், ஊருக்குள் இருப்பவர்களை மேற்பார்வையிடவுமே அதற்கு நேரம் சரியாக இருக்கும். அதற்கு நன்றிக்கடனாக வருடத்தில் ஒரு நாள் பங்குனி மாசத்தில் ஊரே வரி போட்டு கோலாகலமாக பொங்கல் வைத்து முளைப்பாரி, கரகம், மஞ்சத்தண்ணி சகிதம் கொண்டாடி மகிழும்.

சங்கிலிக் கருப்புக்கு அந்த வேலை கிடையாது. கருப்பன் ரொம்ப துடியானவன். அவனை அப்படியே விட்டா ஊரையெ அழிச்சுபுடுவான்னு நாலுபக்கமும் சங்கிலியால கட்டி ஆறடி ஆழத்துக்கு புதைச்சு தலை மட்டும் மேலே தெரியிற மாதிரி நிக்க வச்சு கும்பிடப் படுற நீண்ட நெடு நடுகல் நாயகன் தான் சங்கிலி கருப்பன்.

கருப்பன் குடும்ப உள்ளூர் நடப்புகளை கவனிப்பவன் அல்ல. அவன் வெளியூர் செல்பவர்களுக்கு துணைக்கு செல்வதும், வெளியூர்காரர்களை ஊருக்குள் வர விடாமல் தடுக்க துணை நிற்கும் காவல் காரன் தான்.

கருப்பனுக்கு பெண்கள் ராத்திரியில் சுத்துவது ஆகாது. ஊர் சொத்தை திங்க நினைப்பவர்களும் ஆகாது. இவையெல்லாம் கருப்பன் நேரடியா வந்து செய்கிறானா இல்லை கருப்பன துணைக்கி வச்சுகிட்டு அவனோட வாரிசுகள் இதச்செஞ்சாய்ங்களான்னு தெரியாது. ஆனா இத்தனை வருசமா இந்த ஊர கட்டிகாப்பாத்தி, எவனையும் அனாவசியமான காரியத்தனம் பண்ணவிடாம காப்பாத்தி வந்திருக்கிறான்.

இன்று என் தலைமுறையில் தான் இவர்களுக்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது. பல காலமாக கட்டுண்டு கிடந்த இவர்களுக்கு ரிட்டைர்டுமெண்டு கொடுத்து விட்டு பெருந்தெய்வ சிலைகளை கொண்டுவந்து சுற்றிலும் சுவரமைத்து முன்னால் மிடுக்காக ஒரு கிரில் கேட் வைத்து சொகுசாக உள்ளே உக்கார வைத்து கும்பிட துவங்கி விட்டோம். ஆமாம், எல்லாம் ஆகம விதிப்படிதான்!

உள்ளூர் தெய்வங்கள் - 1

இப்போது இதை எழுத காரணம், வரும் திங்கட்கிழமையன்று, எங்கள் அம்மா வழி தாத்தா ஊரில் அம்மன் சிலை வைத்து குடமுழுக்கு விழா நடத்துகிறார்கள். இத்துடன் இத்தனை வருடங்களாக காத்துவந்த எங்கள் சொந்த தெய்வமான மந்தையம்மனை வெறியேற்றிவிட்டு காளியம்மனை கொண்டுவந்து வைக்கிறோமே என்ற ஒரு குற்ற உணர்ச்சியின் காலப்பதிவே இந்த கல்வெட்டு(ப்ளாக் பேஜ்)

மந்தை அம்மன் என்ற ஒன்று இந்த பகுதி மக்களின் ஒரு வகை வழிபாட்டுத்தெய்வம். அதாவது மக்கள் கூட்டம் கூட்டமாக ஒவ்வொரு இடங்களில் தங்கள் குடியிருப்பை அமைத்துக்கொள்ளும் போது, அந்த கூட்டத்திற்கு அல்லது அந்த மந்தைக்கு இடமளித்து காப்பாற்றவேண்டி, அங்கே வாழ்ந்துகொண்டிருக்கும் அந்த லோக்கல் சூப்பர் நேச்சுரல்/ஆதிமுதல் ஓனருக்கு பயந்து பயபக்தி கலந்த மரியாதையின் வெளிப்பாடு தான் இந்த மந்தை அம்மன். இது பிற்காலங்களில் தெய்வம் என்ற சொல்லால் பிறரிடம் கம்யூனிகேட் செய்ய சொல்லித்தரப்பட்டது.

இதுநாள் வரை இத்தகைய தெய்வங்களுக்கு தனி உருவமென்பது கிடையாது. அந்த பகுதியிலேயே கிடைத்த ஏதாவது ஒரு நீட்ட கல்லோ அல்லது முக்கோண வடிவிலான உருவம் போன்ற கல்லோதான் வணக்கத்திற்குரியதாக வைக்கப்பட்டிருந்தது. வருடத்திற்கு ஒரு முறை பங்குனி மாசத்தில் இவ்வகை தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து கொண்டாடுவதே அந்த மந்தையில் நடக்கும் மிகப்பெரிய திருவிழாவாக இருந்தது. இந்த தெய்வங்களுக்கென்று உண்டியல் கிடையாது, தனி(டெடிகேட்டட்) பூசாரி கிடையாது. மக்களோடு மக்களாக அவைகளும் எல்லாச் சண்டைகளிலும் பங்குபெற்று வசவு வாங்கியோ, சாட்சியாகவோ அல்லது பிற்காலத்தில் தண்டணை வழங்கும் ஊர் பெரியவராகவோ வாழ்ந்து கொண்டிருந்தது.

காலங்கள் உருண்டோடின. சைவ, வைணவ, சமண, புத்த, முகலாய, கிருத்துவ....இன்ன பிற மதங்களின் நேரடித்தாக்குதலில் அழியாத இந்த உள்ளூர்காரி இன்று தன் சொந்த மக்களால் முதுகில் குத்தப்பட்டு தூக்கி வெளியே வீசப்படும் நிலை வருமென்று யாரும் அவளுக்கு சொல்லவில்லை.

இன்றைய தலைமுறைக்கு கைக்குள் அடங்காத அளவு பணமும், மூளைக்கு மேல் உள்ள முடியும் சிந்திக்கும் அளவு அறிவும் வந்ததன் பலன், மந்தையம்மன், காளியம்மனின் மறு உருவமென்றும், இத்தனை நாள் வசதியில்லாததால், உருவமற்று கஷ்டப்பட்டாள் என்றும், அவளுக்கு புனர்ஜென்மமளித்து, இன்று அவளுக்கு உருவமளித்து, நல்ல கோயில் அமைத்து, அதற்கு சாஸ்திர சம்பிரதாயப்படி(?) பெருந்தெய்வ புரமோசன் கொடுத்திருக்கிறார்கள்.

இதை தட்டிக்கேட்க அவளுக்கு தைரியமில்லை, அவளுக்கு துணை நின்று இதை தடுத்து நிறுத்த எனக்கு நெஞ்சுரமுமில்லை.

நான் இன்று இதை எழுதுவதற்காக இத்தனை ஆயிரம் வருஷங்களாக என் வம்ச மூதாதையரை எல்லாம் காற்றிலும் மழையிலும் நோய் நொடிகளிலும் போர் பிரளயங்களிலுமிருந்து காத்ததன் பலனை இந்த ஒரு ப்ளாக் பேஜ் எழுதி விட்டு கையை தட்டிவிட்டு துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு என் கடன் தீர்ந்த திருப்தியுடன் என் பொழப்பை பார்க்கச் செல்கிறேன்!